எழுத்துகள் எங்கே பிறக்கின்றன?

 
எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பவை ஒலியணுக்கள் ஆகும். இதை நன்னூல் மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலிஎழுத்து என்று குறிப்பிடுகிறது.
 
olippu payirchi
olippu payirchi
உயிருள்ள உடம்பினுள்ளே எழுகின்ற காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.
 
எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சி பிறப்பு என இருவகையாக பிரிக்கலாம். எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும், உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சி பிறப்பு என்று அறிஞர்கள் கூறுவர்.
 
உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய் எழுத்துக்கள் பதினெட்டும் முதல் எழுத்துக்கள் எனப்படும். மெய் எழுத்துக்களை ஒலிக்கும் பொழுது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி என்பன. அவ்வொலிகள் வேறு படுவதற்கு காரணம், அவை பிறக்கும் இடங்கள் ஆகும்.
 

முதல் எழுத்துக்களின் இடப்பிறப்பு

 
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் கழுத்திலிருந்து பிறக்கின்றன.
 
மெல்லின எழுத்துக்கள் ஆறும் மூக்கிலிருந்து பிறக்கின்றன.
 
வல்லின எழுத்துகள் ஆறும் மார்பிலிருந்து பிறக்கின்றன.
 
ஆவி இடைமை இடமிடறு ஆகும்
மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை – நல்லூல் 75.
 
( ஆவி – உயிரெழுத்து; இடைமை – இடையினம்; மிடறு – கழுத்து; மென்மை – மெல்லினம்; உரம் – மார்பு.)
 

முதலெழுத்துகளின் முயற்சி பிறப்பு

உயிர் எழுத்துக்கள் 12

  • அ, ஆ ஆகிய இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

அவற்றுள், முயற்சியுள் அஆ அங்காப் புடைய. நன்னூல், 76

  • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்தும் வாயைத் திறப்பதன் மூலம் மேல்வாய்ப் பல்லை நா விளிம்பு தொடுவதனால் தோன்றுகின்றன.

இஈ எஏ ஐஅங் காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே.  நன்னூல், 77

  • உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்து எழுத்தும் உதடுகளை குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

உஊஒஓஔ இதழ் குவிவே. நன்னூல், 78

மெய் பதினெட்டு

  • க், ங் இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தை தொடுவதினால் தோன்றுகின்றன.
  • ச், ஞ் – இவ்விரு மெய்களும் இடை நா, நடு அண்ணத்தை தொடுவதினால் தோன்றுகின்றன.
  • ட், ண் – இவ்விரு மெய்களும் நாவினது நுனி, அண்ணத்தின் நுனியை தொடுவதினால் தோன்றுகின்றன.
(நா என்றால் நாக்கு; அண்ணம் என்றால் மேல் வாய் பகுதி.)
 
  • த், ந் – மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி பொருந்துவதால் இவ்வெழுத்துக்கள் தோன்றுகின்றன.
 
  • ப், ம் – மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த இவை தோன்றும்.
 
  • ய் – இதில் நாக்கின் அடிப் பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியை பொருந்துவதால் தோன்றுகிறது.
 
  • ர், ழ் – இவை மேல் வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கின்றன.
 
  • ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
 
  • ள் – இது மேல் வாயை நாவின் ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறக்கிறது.
 
  • வ் – இது மேல்வாய்ப் பல்லை கீழுதடு பொருந்துவதால் பிறக்கின்றது.
 
  • ற், ன் – இவை மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
 

சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு, முயற்சி பிறப்பு

 
ஆயுதம் ஆகிய சார்பெழுத்து, தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது. அதன் முயற்சி பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தல் ஆகும்.  பிற சார்பு எழுத்துக்கள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றுவதற்குரிய இடத்தையும், அவை பிறத்தற்குரிய முயற்சியையும் தமக்கு உரியனவாக கொண்டு ஒலிக்கின்றன.
 
ஆயுத க்கு இடம் தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து எனவும் தம்முதல் அனைய – நன்னூல், 87