தயக்கமின்றி தமிழிலேயே பேசுவோம்
தமிழ் என்ன பாடுபடுகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், நமது தமிழ்நாட்டிலேயே ஏன் உலக அளவில் இருக்கும் தமிழ் மக்களிடையே பார்க்கலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் தமிழை அதன் ஆழமும் நுட்பமும் அறியாமல் தமிழை எப்படி பேசுகின்றனர் என்பதை பார்க்கலாம். நன்றாக சிந்தித்துப் பாருங்கள், இந்தத் தலைமுறையினரை இப்படியே விட்டு விட்டோம் என்றால், நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் எப்படி தமிழை பேசுவார்கள்? உதாரணத்திற்கு சமீபத்தில் எனது மைத்துனரின் வீட்டில் நடந்த விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
இனியன் மூன்று வயது குழந்தை, அவன் தன் வீட்டு வாயிலில் விளையாடிக்கொண்டிருந்தான். மிகவும் குறும்புக்கார சிறு பிள்ளை அவன். அவனுக்கு ஒரு அண்ணனும் உண்டு. ஒரு முறை இருவரும் தன் வீட்டு வாசலில் தன்னுடைய செல்லப்பிராணி யுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வீடு வாகனங்கள் அதிகம் போகாத இடம். அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவ்வழியே ஓய்வுபெற்ற அரசு அலுவலரும் தமிழ் பண்பாளருமன இனியன் தந்தையின் நண்பர் செழியன் வந்தார்.
அவர் வந்தவுடன் இனியனிடம், ‘தம்பி அப்பா இருக்கிறாரா?’ என்று வினவிய படியே படியே வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரை வரவேற்ற இனியனின் தந்தை சபரி வெங்கடேஷ், “வாங்க, வாங்க என் அருமை நண்பரே…, இனியனிடம், இனியா…., அங்கிளுக்கு சேர் எடுத்து வா, மம்மியை கூப்பிட்டு வா, மற்றும் போய் ஃபேன் சுவிட்சை போடு என்றார்.
தன் மனைவியான நோக்கி, காயத்ரி… ஃப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் எடுத்து வா” என பரபரப்பாக கூறினார். தமிழ் பண்பாளரான சபரியின் நண்பர் செழியன் நாற்காலியில் உட்கார்ந்தார்.
ஹலோ ஃப்ரெண்ட் டீ, காபி, கூல்ட்ரிங்ஸ் கொடுக்கிறீர்களா? எனக்கேட்டார்.
செழியன் பொறுமையுடன், “சபரி! நல்ல தமிழ் சொற்களை விடுத்து, ஏன் ஆங்கிலச் சொற்களை வழிந்து பேசுகிறீர்கள்?”
மேலே கண்ட ஆங்கில சொற்களான சேர் என்பதனை நாற்காலி எனவும், பேனை மின்விசிறி எனவும் கூறலாம் அல்லவா? என்றார் செழியன்.
சபரி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவருடன் தமிழிலேயே உரையாடினார். இதை கேட்கும்பொழுது மிகவும் இதமாகவும் அழகாகவும் இருந்தது.
மேலே கண்ட உரையாடலில் தமிழ்ச் சொல்லை அறிவோம்!
ஸ்விச் – சொடுக்கி,
பிரிஜ் – குளிரூட்டும் பெட்டி,
ஐஸ் வாட்டர் – குளிர்நீர்,
டீ – தேனீர்,
கூல் ட்ரிங்ஸ் – குளிர் சாறுகள்,
ஃப்ரெண்ட் – நண்பர்
மம்மி – அம்மா
நாமும் நம் குழந்தைகளுடன் மட்டுமல்லாது, நமது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தமிழிலேயே பேசி உரையாடும்போது, வருங்கால சந்ததியினரும் அதனை நன்குணர்ந்து பேசிப் பழகிக் கொள்வார்கள்.