தொகைநிலைத் தொடர்கள் என்றால் என்ன?

 
இந்த ப்ளாக்கில் நாம் தொகைநிலைத் தொடர்கள் குறித்து கற்றுக் கொள்ள இருக்கிறோம். தொடர் நிலை தொடர்கள் என்பதை தொடர்+நிலை+தொடர் என்று பிரிக்கலாம்.
 
முதலில் தொடர் என்றால் சொற்கள் இரண்டு முதலாக தொடர்ந்து வந்து பொருள் தருவது.
 
உதாரணத்திற்கு “தேன்மொழி பாடம்” படித்தாள். இத்தொடரில் உள்ள மூன்று சொற்களும் தொடர்ந்து வந்து பொருளைத் தருகின்றன. சொற்கள் தொடர் ஆகும்போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை வினை உவமை முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வரும். இப்படி மறைந்து வருவதை நாம் ஏற்கனவே உருபு என்று பார்த்தோம்.  இங்கனம் உருபுகள் மறைந்து வரும் தொடர்களை தொகைநிலைத் தொடர்கள் என்பர்.
 
தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவை
  1. வேற்றுமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. உவமைத்தொகை
  5. உம்மைத்தொகை
  6. அன்மொழித்தொகை
என்பன.
 

உவமைத் தொகை என்றால் என்ன?

 
கயல்விழி என்ற சொல்லை உற்று நோக்குவோம். இச்சொல்லில் கயல்,  விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இந்தச் சொல்லை பெயர்ச் சொல்லாகவும் உவமை தொகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். கயல் “போன்ற” விழி உடையாள். இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக் கூறுவது உண்டு.

வேற்றுமைத்தொகை என்றால் என்ன?

 
வேற்றுமை+ தொகை என்று பிரித்து பொருள் உணர வேண்டும். முதலில் வேற்றுமை வேற்றுமை என்பது 2 சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வேறுபடுத்தி காட்டும். உதாரணத்திற்கு
 
சாஸ்தா தவா பார்த்தான்
 
இந்தச் சொற்றொடரை எடுத்துக்கொள்வோம். இதில் யார் யாரை பார்த்தான், பார்த்தது யார்? என்று ஆழ்ந்து நோக்காமல் பொருள் கூற இயலாது. ஆனால் இதற்குப் பொருள் சாஸ்தாவை தவா பார்த்தான் என்று பொருள்படும்.
 
சாஸ்தாவை தவா பார்த்தான் – என்னும் இத்தொடரில் “” என்னும் உருபு யார் யாரைப் பார்த்தால் என பெயரை வேறுபடுத்திக் காட்டுவதால் “வேற்றுமை” என்கிறோம். பெயரின் பொருளை. வேறுபடுத்திக் காட்டும் உருபுக்கு “வேற்றுமை உருபு” என பெயர்.
 
இவ்வேற்றுமைகள் எட்டு வகை உண்டு. இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. ஆனால் மற்ற வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு.
 
அவை ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பனவாகும். இரண்டாம் வேற்றுமை உருபு முதல் ஏழாம் வேற்றுமை உருபு வரை உள்ளன மற்றும் ஏதேனும் ஒன்று வேற்றுமை உருபாய் வரும். இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவதனை வேற்றுமைத்தொகை என்கிறோம்.
 
உதாரணங்கள் கீழே
 
1. பால் பருகினார் – இது இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆகும்.
 
(பால்+ஐ+பருகினான் – இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.)
 
2. தலை வணங்கினான் – இது மூன்றாம் வேற்றுமைத்தொகை ஆகும்.
 
(தலை+ஆல்+வணங்கினான். இங்கு ஆல் என்னும் உருபு மறைந்து உள்ளது)
 
3. வேலன் மகன் – இது நான்காம் வேற்றுமைத்தொகை ஆகும்.
 
(வேலன்+கு+மகன் – இங்கு கு என்னும் உருபு மறைந்து உள்ளது)
 
4. ஊர் நீங்கினான் – இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
 
(ஊர்+ இன் + நீங்கினான் – இங்கு இன் என்னும் உருபு மறைந்துள்ளது)
 
5. செங்குட்டுவன் சட்டை – இது ஆறாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
 
(செங்குட்டுவன்+ அது+சட்டை – இங்கு அது என்னும் உருபு மறைந்து உள்ளது)
 
6. குகை புலி – இது ஏழாம் வேற்றுமைத்தொகை ஆகும்.
 
( குகை+கண்+புலி – இங்கு கண் என்னும் உருபு மறைந்து உள்ளது)
 
மேலே குறிப்பிட்ட உதாரணங்களில் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்ற வேற்றுமை உருபுகளை பயன்படுத்தினோம்.
 
 

வினைத்தொகை என்றால் என்ன?

 
ஊறுகாய் என்ற இத்தொடரை படித்துப் பாருங்கள். இதனை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும்காய் என காலத்திற்கும் ஏற்ப பொருள் கொள்ளலாம். ஆடுகொடி,  பாய்புலி, அலைகடல் ஆகிய தொடர்கள் வினைத்தொகை பயின்று வந்த தொடர்கள் ஆகும். இவ்வாறு காலம் காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம், வினையெச்சம் வினைத்தொகை எனக் கூறுதல் வேண்டும்.
 

பண்புத்தொகை என்றால் என்ன?

 
வெண்ணிலவு, சதுரக்கல், இன்சுவை இச்சொற் தொடர்களைப் படித்துப்பாருங்கள். வெண்மை, சதுரம், இனிமை ஆகிய பண்புப் பெயர்கள் நிலவு, கல், சுவை ஆகிய பெயர்ச் சொற்களோடு சேர்ந்து வரும்பொழுது இரண்டிற்கும் இடையே ஆகிய ஆன என்னும் பண்பு உருபுகளும் மை விகுதியும் தொக்கி அதாவது மறைந்து வந்துள்ளன. எனவே, இவை பண்புத்தொகை பயின்று வந்த தொடர்கள்.
 
பண்புத்தொகையில் பிறிதொன்று நிலை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். எடுத்துக்காட்டாக மல்லிகைப்பூ என்னும் சொல்லைப் பார்ப்போம். மல்லிகை என்பது சிறப்பு பெயர். பூ என்பது பொதுப்பெயர். இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
 

உம்மைத்தொகை என்றால் என்ன?

 
ராஜாதேசிங்கு, உற்றார் உறவினர். இத் தொடர்களை கூர்ந்து கவனியுங்கள். இவற்றில் ராஜாவும் தேசிங்கும் , உற்றாரும் உறவினரும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் உம் என்ற இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தருவது, உம்மைத்தொகை எனப்பட்டது.
 

அன்மொழித்தொகை என்றால் என்ன?

 
உவமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கி வருவது உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.
 
உதாரணம். கயல்விழி வந்தாள். இத்தொடரில் முதலில் உள்ள கயல்விழி என்பது, கயல் போன்ற விழி என்னும் பொருளைத்தரும் உவமைத்தொகை ஆகும். இதனை முன்னரே பார்த்தோம். ஆனால் ‘வந்தாள்’ என்னும் வினைச் சொல்லை தழுவி நின்றதனால், கயல் போன்ற விழியை உடைய பெண் வந்தாள் என பொருள் கொள்ளுதல் வேண்டும்.
 
இதில் உடைய பெண் என்னும் சொற்கள் தொடரில் இல்லாதவை. இவ்வாறு உவமைத் தொகைய அடுத்து அல்லாத மொழி தொக்கி வருவதனால் மேல் கொண்ட தொடரை உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனக் கொள்கிறோம்.
 
இதனைப் போன்று வேற்றுமை வினை பண்பு உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்கு புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.