11. பாஞ்சாலி சபதம்

Chapter 11 –  பாஞ்சாலி சபதம் 

விதுரருடைய எச்சரிக்கையைத் துரியோதனன் சிறிதும் பொருட்படுத்தவில்லை . “தம்பி – துச்சாதனா! அந்தப்புரம் சென்று பாஞ்சாலியை இங்கே இழுத்து வா” என்று கட்டளை இட்டான். 

கொடியவனான துச்சாதனன் அந்தப்புரம் வந்தான். பாஞ்சாலியிடம் அவன்,

“தருமன் உன்னைச் – சூதில் தோற்றுவிட்டான். இனி நீ எங்கள், அடிமை, உன்னை அவைக்கு அழைத்து வர அரசர் கட்டளையிட்டு உள்ளார். என்னுடன் வா” என்று மிரட்டினான்.

என்ன செய்வது என்று அறியாமல் கதறி – பாஞ்சாலி. அங்கும் இங்கும் ஓடினாள். அவள் கூந்தலை எட்டிப் பிடித்தான் துச்சாதனன். தரதரவென்று அவளை இழுத்துக் கொண்டு சூதாட்ட அவைக்கு வந்தான்.

யாராவது உதவி செய்ய மாட்டார்களா. எல்லோரையும் பார்த்தாள் பாஞ்சாலி. சிரித்த துச்சாதனன் “இங்கே யாரும் உதவி செய்ய மாட்டார்கள். அடிமையாகிய உனக்கு மேலாடை எதற்கு?” என்று அவள் புடவையை இழுக்கத் தொடங்கினான். இந்தக் கொடுமையைக் கண்டு எல்லோரும் கலங்கினார்கள். 

“கண்ணா! நீயே அடைக்கலம். என்னைக் காப்பாற்று” என்று கதறினாள் அவள். கண்ணன் அருளால் அங்கே அதிசயம் நிகழ்ந்தது. துச்சாதனன் இழுக்க இழுக்கப் பாஞ்சாலியின் புடவை வளர்ந்து கொண்டே இருந்தது. அவன் இழுத்த புடவை மலை போலக் குவிந்தது. சோர்ந்த அவனும் தன் முயற்சியைக் கைவிட்டான்.

இப்படிப்பட்ட அவமானம் நிகழ்ந்ததே என்று கோபம் கொண்டான் பீமன். “இந்த துச்சாதனனின் மார்பைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன்” என்று சபதம் செய்தான். துரியோதனனோ சிறிதும் கவலைப்படவில்லை. “பாஞ்சாலி! என் தொடையில் வந்து அமர்” என்று தொடையைத் தட்டினான்.

இதைக் கண்ட பீமன் “போர்க்களத்தில் துரியோதனின் தொடையை முறித்து எறிவேன். இதுவும் நான் செய்யும் சபதம்” என்று கர்ச்சித்தான். பீமனின் சபதத்தைக் கேட்டுத் திருதராட்டினன் நடுங்கினான். பாண்டவர்களை எப்படி அமைதிப்படுத்துவது என்று சிந்தித்தான்.

“மகளே பாஞ்சாலி என் மகன்களின் கொடிய செயல்களுக்காக வருந்துகிறேன். எனக்காக நீ அவர்களை

மன்னிக்க வேண்டும். உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள். தருகிறேன்” என்றான். “அடிமைத் தளையிலிருந்து என் கணவர்களை விடுவிக்க வேண்டும்” என்றாள் அவள்.

“அப்படியே தந்தேன்” என்ற திருதராட்டினன் “தருமா! நீங்கள் அனைவரும் இந்திரப் பிரஸ்தம் செல்லுங்கள். உங்கள் நாட்டை ஆளுங்கள்” என்றான்.

பாண்டவர்கள் புறப்படத் தயாரானார்கள். கோபத்துடன் துரியோதனன் “தந்தையே! என் முயற்சி அனைத்தையும் பாழாக்கிவிட்டீர்கள். இனிமேல் பாண்டவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். துருபதனின் துணையும் அவர்களுக்கு உள்ளது. அத்தினாபுரத்தின் மீது படையெடுத்து வரப் போகிறார்கள். அதைத் தடுக்க நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.

உள்ளம் மாறிய திருதராட்டினன், “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். “மீண்டும் தருமனைச் சூதாட்டத்திற்கு அழையுங்கள். தோற்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுக்காலம் காட்டில் வாழ வேண்டும். ஓராண்டு மறைந்து வாழ வேண்டும்.

மறைந்து வாழும் காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடாது. கண்டுபிடிக்கப் பட்டால் மீண்டும் – பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும். இவ்வாறு நிபந்தனைகளைச் சொல்லுங்கள்” என்றான் துரியோதனன்.

தருமனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இம்முறையும் சூதாட்டத்தில் தருமனுக்குத் தோல்வியே கிடைத்தது. மீண்டும் இப்படிக் கொடுமை நடந்ததே என்று கோபம் கொண்டாள் பாஞ்சாலி. சூதாட்டம் நடந்த அவைக்கு வந்தான். சீற்றத்துடன் தன் கூந்தலை அவிழ்த்தாள்.

“கொடியவன் துச்சாதனின் இரத்தத்தை என் கூந்தலில் பூசுவேன். அதன் பிறகே என் கூந்தலை முடிப்பேன்” என்று சபதம் செய்தாள்.