
அத்தியாயம் 15 வெளிப்பட்ட பாண்டவர்கள்
பாண்டவர்கள் காற்றைப் போல மறைந்து விட்டார்களே எங்கே இருக்கிறார்கள்? தெரியவில்லையே” என்று குழம்பினான் துரியோதனன்.
கீசகன் கொல்லப்பட்ட செய்தி – அவனுக்குக் கிடைத்தது. கீசகனைக் கொன்றவன் பீமனாகவே இருக்க வேண்டும். பாண்டவர்கள் விராட நகரத்தில் மறைந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான்.
காமத்சய நாட்டின் பகை அரசனாகிய சுதர்மனுடன் கலந்து பேசினான். இருவரும் மத்சய நாட்டைத் தனித்தனியே தாக்குவது என்று முடிவு செய்தனர். அதன்படி மத்சய நாட்டின் தென்பகுதியை சுதர்மன் தாக்கினான். எதிர்த்த விராட மன்னனைச் சிறைப்படுத்தினான்.
இதை அறிந்த தருமன் “பீமா! நாம் மறைந்து வாழ வேண்டிய கடை நாள் இது. நாம் யார் என்ற உண்மை வெளிப்படக் கூடாது. கவனமாக நடந்து கொள். விராட மன்னனை மீட்டு வா” என்றான்.
விரைந்து சென்ற பீமன் சுதர்மனைத் தோற்கடித்தான். விராட அரசனை மீட்டான். கௌரவர்களின் பெரிய படை மத்சய நாட்டு வட பகுதியைத் தாக்கியது. எதிர்ப்பு இல்லாததால் ஆரவாரமாக முன்னேறியது.
எதிரிகளின் படையைக் கண்டு இளவரசன் உத்தரன் நடுங்கினான். மாறுவேடத்தில் தேரோட்டியாக இருந்த அர்ச்சுனன், “இளவரசே! அச்சம் வேண்டாம். நான்தான் அர்ச்சுனன். இவர்களை எப்படி எதிர்ப்பது என்று எனக்குத் தெரியும். வெற்றி நமதே” என்றான்.
மகிழ்ந்த உத்தரன் “நான் தேரை ஓட்டுகிறேன். நீங்கள் போர் செய்யுங்கள்” என்றான். படைக் கருவிகள் இருந்த மரத்தின் அருகே நின்றது தேர். தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான் அர்ச்சுனன்.
பெருத்த ஓசையுடன் தேர் அங்கிருந்து புறப்பட்டது. காண்டீபத்தின் நாண் ஒலி எங்கும் கேட்டது. “தேரில் அர்ச்சுனன் இருக்கிறான். மறைந்து வாழும் காலத்தில் முன்னரே வெளிப்பட்டு விட்டான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் துரியோதனன்.
“கணக்குப்படி நேற்றுடன் அவர்களின் அஞ்ஞாக வாசம் முடிந்தது” என்றார் பீஷ்மர். அப்பொழுது அர்ச்சுனனின் தேர் அங்கு வந்தது. அவனின் அம்புகளை எதிர்த்து நிற்க யாராலும் முடியவில்லை . எல்லோரும் தோற்று ஓடினார்கள்.
வெற்றி வீரர்களாக அர்ச்சுனனும் உத்தரனும் விராட நகரத்திற்குள் நுழைந்தார்கள். பாண்டவர்கள் மாறுவேடத்தில் இருந்த உண்மையை அறிந்தான் விராட மன்னன். அவர்களிடம் மன்னிப்பு வேண்டினான்.
“இவ்வளவு காலம் எங்களை ஆதரித்தீர்கள். அதற்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் தருமன். “நீங்களும் நானும் உறவினர்களாக வேண்டும். என் மகள் உத்தரையை அர்ச்சுனனுக்குத் திருமணம், செய்ய நினைக்கிறேன்” என்றான் விராட அரசன்.
அதற்கு அர்ச்சுனன் “என் மாணவி உத்தரை. அவளை, நான் திருமணம் செய்து கொள்வது தகாது. என் மகன் அபிமன்யுவிற்கு அவளைத் திருமணம் செய்து வையுங்கள்” என்றான். அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
பாண்டவர்கள் தங்களுக்கு உரிய ஆட்சியை எப்படிப் பெறுவது? இது குறித்து ஆராய்வதற்காக விராட அரசவை கூடியது. நட்பு அரசர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர். கண்ணன், பலராமன், துருபதன் போன்றோரும் அங்கே இருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் சூதாட்டத்தின் நிபந்தனைப்படி பாண்டவர்கள் நடந்து கொண்டனர். அவர்களுக்கு உரிய நாட்டைத் திரும்பத் தருவதே முறை. இது குறித்து திருதராட்டினனுக்குத் தூதனை அனுப்புவோம்.
எதிரியை நம்ப முடியாது. போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்காக வலிமையான அரசர்களை நம் பக்கம் சேர்ப்போம் என்று முடிவு செய்தார்கள். துவாரகைக்கு புறப்பட்டார் கண்ணன்.
விராட அவையில் நிகழ்ந்ததை எல்லாம் ஒற்றர்கள். வழியாக அறிந்தான் துரியோதனன். வலிமை வாய்ந்த அரசர்களைத் தன் பக்கமும் சேர்க்க நினைத்தான். கண்ணனின் உதவியை நாடித் துரியோதனனும் அர்ச்சுனனும் துவாரகைக்கு வந்தனர்.
இருவரையும் வரவேற்ற கண்ணன், “நீங்கள், இருவருமே என் உறவினர்கள். இருவருக்கும் உதவி செய்ய எண்ணுகின்றேன்.
ஒரு பக்கம் வலிமை வாய்ந்த என் படை உள்ளது. மாவீரர்கள் பலர் அதில் உள்ளனர். இன்னொரு பக்கம் நான் இருக்கின்றேன். போர்க்களத்தில் படைக் கருவிகள் எதையும் பயன்படுத்த மாட்டேன். யார் எதைத் தேர்ந்தெடுக்கறீர்கள்?” என்று கேட்டார்.
“கண்ணா ! உன் துணைதான் வேண்டும். எனக்குத் தேரோட்டியாக இருந்து – அருள வேண்டும்” என்று வேண்டினான் அர்ச்சுனன். கண்ணன் போர் செய்யப் போவதில்லை. பெரிய படை நமக்குக் கிடைக்கக மகிழ்ந்தான் துரியோதனன்.
தன் ஆசிரியர் பலராமனிடம் வந்தான் அவன். அவர் உதவியை வேண்டினான். “என் தம்பி கண்ணன் பாண்டவர் பக்கம் இருக்கிறான். அவனுக்கு எதிராக என்னால் போர் செய்ய இயலாது. போர்க்களத்தில் வீரத்துடன் போரிடு. என் வாழ்த்துக்கள்” என்றார் அவர்.
பாண்டவர்கள் தங்கள் துணைப் படைகளுடன் உபப்லாவ்யத்தில் தங்கி இருந்தனர். அர்ச்சுனனும் கண்ணனும் அங்கு வந்தனர்.