அத்தியாயம் – 3 எங்கும் பீஷ்மர் பெயர்

 

அரச வேலையாக சந்தனு யமுனை ஆற்றங்கரைக்கு வந்தான். அங்கே படகோட்டிக் கொண்டிருந்த சத்தியவதி என்ற பெண்ணைப் பார்த்தான். அவள் அழகில் மயங்கினான். அவள் தந்தையாகிய மீனவர் தலைவனைச் சந்தித்தான். “உன் மகளை மணக்க விரும்புகிறேன்” என்றான்.

 

சூழ்ச்சி நிறைந்த அவன் “அரசே! தெய்வத்தின் அருளால் எனக்குக் கிடைத்த அருமை மகள் அவள். அவளுக்குப் பிறப்பவனே அரியணையில் அரசனாக அமர வேண்டும். இதற்கு நீங்கள் ஒப்புக் கொண்டால் திருமணம் செய்து வைக்கிறேன்” என்றான்.

 

“என் ஆசைக்காக இளவரசன் காங்கேயன் உரிமையை மறுப்பதா?” என்று கலங்கினான் சந்தனு. ஏதும் பேசாமல் – அரண்மனை திரும்பினான். சத்தியவதியின் நினைவாகவே இருந்தான். தந்தை கவலையுடன் இருப்பது காங்கேயனுக்குப் புரிந்தது. தேரோட்டி வாயிலாக நடந்ததை எல்லாம் அறிந்தான்.

 

மீனவர் தலைவனைச் சந்தித்த அவன் “உங்கள் மகளை என் தந்தைக்குத் திருமணம் செய்து வையுங்கள். தந்தையின் மகிழ்ச்சிக்காக நான் எதையும் செய்வேன். அரியணையில் என்றும் அமர மாட்டேன். உங்கள் பேரனே அதில் அமர்வான்” என்றான்.

 

“அரியணையை நீ விட்டுத் தரலாம். உனக்குப் பிறக்கும் மக்கள் விட்டுத் தருவார்களா?” என்று கேட்டான் மீனவர் தலைவன். “வானகமே! மண்ணகமே! கதிரவனே! காற்றே! கடவுளர்களே! கேளுங்கள். வாழ்நாள் முழுவதும் நான் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன்” என்று உணர்ச்சி பொங்கச் சபதம் செய்தான் அவன்.

அப்பொழுது வானவர்கள் அவன் மீது பூ மழை பொழிந்தனர். விண்ணில் எங்கும் பீஷ்மன் என்ற குரல் எழுந்தது. பீஷ்மன் என்றால் செயதற்க்கு அரிய சபதம் செய்தவன் என்பது அதற்குப் பொருள்.

 

அன்றிலிருந்து காங்கேயன் “பீஷ்மர்” என்று எல்லோராலும் மதிப்புடன் அழைக்கப்பட்டார். மகன் செய்த சபதத்தை எண்ணி நெகிழ்ந்தான் சந்தனு. “மகனே! நீ எப்பொழுது விரும்புகிறாயோ அப்பொழுதுதான் உன் உயிர் நீங்கும்” என்று வரம் தந்தான். 

 

சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற மகன்கள் பிறந்தனர். சந்தனு திடீரென்று இறந்து போனான். இளவரசர்கள் இருவரும் சிறுவர்களாக இருந்தனர். ஆட்சிப் பொறுப்பை பீஷ்மரே கவனித்து வந்தார்..



சித்திராங்கதன் என்ற கந்தர்வன் இருந்தான். தன் பெயரில் பூவுலகில் ஒருவன் இருப்பதை அறிந்தான். கோபத்துடன் அத்தினாபுரம் – வந்தான். இளவரசன் சித்திராங்கதனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.

 

சில ஆண்டுகள் கழிந்தன. விசித்திர வீரியன் அரசனாக அரியணையில் அமர்ந்தான். காசி நாட்டு இளவரசிகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா மூவருக்கும் சுயம்வரம் நிகழ்ந்தது. பல நாட்டு அரசர்களும் அங்கே வந்திருந்தார்கள்.

 

சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்தார் பீஷ்மர். அவரைக் கண்டு எல்லோரும் அஞ்சினார்கள். இளவரசிகள் மூவரையும் இழுத்து வந்து தன் தேரில் ஏற்றினார். எதிர்த்த அரசர்களை எல்லாம் விரட்டி அடித்தார்.

 

“இளவரசிகளே! அத்தினாபுர அரசன் விசித்திர வீரியன். அவனுக்குத் திருமணம் செய்யவே உங்களைத் தூக்கிச் செல்கிறேன்” என்றார்.

அவர்களில் மூத்தவளான அம்பா, “மாவீரரே! சௌபல நாட்டு அரசன் சால்வனை நான் காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் கொண்டுள்ளோம்” என்றாள்.

 

“நீ விரும்புகின்றவனையே திருமணம் செய்து கொள்” என்று அவளை அனுப்பி வைத்தார் அவர். விசித்திர வீரியனுக்கும், அம்பிகா, அம்பாலிகாவிற்கும் திருமணம் நடந்தது. தன் காதலன் சால்வனைச் சந்தித்தாள் அம்பா. நிகழ்ந்ததைச்  சொல்லித் தன்னை மணக்குமாறு வேண்டினாள்.

 

“போரில் நான் பீஷ்மரிடம் தோற்றுவிட்டேன். உன்னை மணக்கும் உரிமை எனக்கு இல்லை” என்றான் சால்வன்.

பீஷ்மரிடம் வந்த அவள் நடந்ததைச் சொன்னாள். விசித்திர வீரியனை அழைத்தார் அவர். “இன்னொருவனை விரும்பியவளைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று மறுத்தான் விசித்திர வீரியன்.

 

“பீஷ்மரே! நீங்களாவது என்னை மணந்து கொள்ளுங்கள்” என்று கெஞ்சினாள் அவள். 

 

”வாழ்நாள் முழுமையும் பிரம்மச்சாரியாக வாழ்வதாகச் சபதம் செய்து உள்ளேன். அதை என்றும் மீற மாட்டேன்” என்றார் அவர்.

 

“பீஷ்மரே! உங்களால் என் வாழ்வே பாழாகி விட்டது. உங்களைக் கொல்லாமல் விட மாட்டேன்” என்று கோபத்துடன் சென்றாள் அவள்.

 

எலும்புருக்கி நோயால் விசித்திர வீரியன் திடீரென்று இறந்து போனான். – “இரண்டு மகன்களும் இறந்து விட்டார்களே. குலம் தழைக்க வழி இல்லையே” என்று கதறினாள் சத்தியவதி.

பீஷ்மரை அழைத்த அவள் “மகனே! நீ அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வேண்டும். புகழ் பெற்ற நம் அரச பரம்பரை அழியக் கூடாது. உன் தாயே வேண்டுவதால் நீ சபதத்தை மீறலாம். அது தவறு ஆகாது” என்றாள். அதை ஏற்கவில்லை பீஷ்மர்.

 

இதற்காக வியாச முனிவரிடம் முறையிட்டாள் சத்தியவதி. அவர் அவளுடைய மருமகள்களுக்கு புத்திர பாக்கியம் அளிப்பதாக உறுதி அளித்தார்.

 

சத்தியவதியிடம் வியாச முனிவர், மூத்த மருமகளுக்குப் பார்வை அற்ற மகனே பிறப்பான். அடுத்தவளுக்கு உடல் வெளுத்த மகனே பிறப்பான்” என்றார். அப்பொழுது அங்கே ஏற்பட்ட ஒரு குழப்பத்தினால் பணிப்பெண் ஒருவளும் கருவுற்றாள்.

 

தாயிடம் வந்த அவர், “பணிப் பெண்ணிற்கு நற்பண்புகள் நிறைந்த மகன் பிறப்பான். இனிமேல் என்னை இந்த முயற்சியில் ஈடுபடுத்தாதீர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அம்பிகாவிற்கு பார்வை அற்ற திருதராட்டினன் பிறந்தான். அம்பாலிகாவிற்கு பாண்டு பிறந்தான். பணிப்பெண்ணிற்கு விதுரன் பிறந்தான்.

அவர்கள் மூவருக்கும் எல்லாக் கலைகளையும் கற்றுத் தந்தார் பீஷ்மர். மூவரும் இளைஞர்கள் ஆனார்கள்.

தோள் வலிமை நிறைந்தவனாக திருதராட்டினன் விளங்கினான். வில்லாற்றலில் இணையற்றவனாகப் பாண்டு விளங்கினான். நேர்மையானவனாக அறநெறிகளை நன்கு அறிந்தவனாக விதுரன் விளங்கினான். பார்வை அற்ற  திருதராட்டினன் அரியணையில் அமரவில்லை . அதனால் இளையவன் பாண்டுவே அரசனாக முடிசூட்டப்பட்டான்.

 

திருதராட்டினனுக்கும் காந்தார நாட்டு இளவரசி காந்தாரிக்கும் திருமணம் நடந்தது. கற்புக்கரசியான அவள்,

என் கணவருக்குப் பார்வை இல்லை. நானும் பார்வை அற்றவளாகவே இருப்பேன் என்று உறுதி பூண்டாள். கறுப்பு துணியால் தன் கண்களைக் கட்டிக் கொண்டான். பார்வை அற்றவனைப் போல வாழ்க்கை நடத்தி வந்தாள் இவளுடைய உடன்பிறந்தவனே சகுனி ஆவான்.

 

குந்திபோசனின் வளர்ப்பு மகள் குந்தியைப் பாண்டு திருமணம் செய்து கொண்டான். இவள் கண்ணனுக்கு அத்தை முறையாவாள். மாத்ர நாட்டு இளவர மாத்ரியையும் பாண்டு திருமணம் செய்து கொண்டான்.

 

வலிமை மிகுந்த பாண்டு அண்டை நாடுகளை வென்று அத்தினாபுரத்துடன் சேர்த்தான். வேட்டையாடுவதில் மிகுந்த பாண்டு அண்டை நாடுகளை வென்று அத்தினாபுரத்துடன் சேர்த்தான். வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட அவன் காட்டிற்குச் சென்றான். அங்கே ஆண் மானும் பெண் மானும் இணையாக விளையாடி

ஆண் மானை நோக்கி அம்பு எய்தான். மானின் உடலைத் துளைத்தது அம்பு. அங்கே மானிற்குப் பதில் முனிவர் ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார்.

 

கோபத்துடன் அவர், “நானும் என் மனைவியும் மான் வடிவம் எடுத்து மகிழ்ச்சியாக இருந்தோம். இணைய இருக்கும் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்பது விதி. இதை மீறி என்னைக் கொன்றுவிட்டாய். மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கும் போது உன் உயிர் நீங்கும்” என்று சாபம் தந்துவிட்டு இறந்தார்.

 

ஐயோ! இப்படி சாபம் பெற்று விட்டேனே என் கலங்கினான் பாண்டு. அரசாட்சியைத் துறந்தான். மனைவியருடன் காட்டிற்கு வந்தான். துறவி போல அங்கே வாழ்ந்து வந்தான். அதனால் திருதராட்டினன் அரச ஆனான்.

நூறு குழந்தைகளைக் காந்தாரி பெறப் போகிறாள் என்பதை அறிந்தான் பாண்டு. மனைவியரிடம் அவன் “சாபம் பெற்றதால் குழந்தைகளைப் பெற இயலாதவன் விட்டேன். நம் குலம் தழைக்க வழி இல்லையே” என்று வருந்தினான்.

 

ஆறுதல் சொல்ல நினைத்த குந்தி “குந்திபோசனின் அரண்மனையில் நான் சிறுமியாக இருந்தேன். அப்பொழுது அங்கு துர்வாச முனிவர் வந்தார். அவரை நன்கு கவனித்துப் பணிவிடை செய்தேன்.

 

மகிழ்ந்த அவர் எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லிக் தந்தார். அதைச் சொன்னால் எமன், வாயு, இந்திரன் அசுவினி தேவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அருளால் மகன் பிறப்பான் என்றார்” என்றாள்.

 

“நம் திருமணத்திற்கு முன்னரே இந்த மந்திரத்தைச் சோதித்தேன். கதிரவன் தோன்றி ஒரு மகனைத் தந்தார். பழிக்கு அஞ்சி அந்தக் குழந்தையைப் பெட்டியில் வைத்தேன். ஆற்றில் விட்டுவிட்டேன்” என்பதை மறைத்து விட்டேன் என்றாள். 

 

மகிழ்ந்த பாண்டு, “நம் குறை தீர்ந்தது. தேவர்கள் அருளால் குழந்தைகளைப் பெறு” என்றான்.

எமனின், அருளால் குந்திக்குத் தருமன் பிறந்தான். வாயுவின் அருளால் பீமனும் இந்திரன் அருளால் அர்ச்சுனனும் பிறந்தான். 

 

அசுவினி தேவர்களை அழைக்கும் மந்திரத்தை மாத்ரிக்கு சொன்னாள் குந்தி. மாத்ரிக்கு நகுலனும் சகாதேவனும் பிறந்தார்கள். பாண்டுவின் மக்களாதலால் அவர்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.