அணிஇலக்கணம்

கடந்த சில வாரங்களாகவே தமிழ் இலக்கணத்தைப் பற்றி ஆழ்ந்து படித்து வருகிறோம். நீங்கள் என்னுடன் சேர்ந்து செய்யும் இந்த பயணம் உங்களுடைய தமிழ் அறிவுக்கு ஊட்டம் அளிக்கக்கூடியது. 

தமிழ் இலக்கணம் ஐந்து வகையாக பிரிக்கலாம்.

அவை

 1. எழுத்திலக்கணம்,
 2. சொல்லிலக்கணம்,
 3. பொருள் இலக்கணம்,
 4. யாப்பிலக்கணம்,
 5. அணி இலக்கணம்

ஆகும். இந்த பிளாக்கில் யாப்பிலக்கணத்தை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

எல்லா உயிரினங்களைப் போல் தமிழும் பல உறுப்புகள் கொண்ட ஒரு கட்டமைப்பு தான். யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். எலும்பு, தசை, நரம்பு முதலியவற்றால் உடல் கட்டு பட்டு இருப்பது போல தமிழ் செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடல் இயற்றுவது யாப்பு எனப்படும்.

செய்யுள் உறுப்புகள் யாவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் யாப்பின் உறுப்புகள் ஆகும்.

அசை என்பது ஓர் எழுத்து தனித்தோ அல்லது இணைந்தோ ஒலிப்பது ஆகும். அந்த அசை, நேரசை, நிரையசை என இரு வகை உண்டு.
அசைகள் பல சேர்ந்து அமைவது சீர் எனப்படும்.
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.
இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.
அடிகள் இரண்டு முதலியனவாகப் தொடர்ந்து அடிக்கு பாடுவது, பா எனப்படும்.

இவ்வண்ணம், செய்யுள் இலக்கணத்தைக் கூறுவது யாப்பிலக்கணம் எனப்படும்.

 

இப்படித் தொடர்ந்து அடுக்கி பாடும் பா நான்கு வகைகள். அவை வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்பதாகும். இந்த நான்கு வகை ஓசை நயத்தை வேறுபடுத்தி அறிவதற்காக இந்த பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1330 திருக்குறளும் வெண்பா தான். ஆனால், இரண்டடிகள் மட்டும் வருவதனால், குறள் வெண்பா என அழைப்பர்.

வெண்பா எடுத்துக்காட்டுகள் இங்கே.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


கீழ்க்கண்ட செய்யுள் நேரிசை வெண்பா விற்கான எடுத்துக்காட்டு

தமயந்தி நளனுக்கு மாலை விட்டது என்கிற பாடல் இதோ உங்களுக்காக.

கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி

நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்

அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.
 • கண் இமைத்தலால்
 • காலடி நிலத்தில் படிந்திருப்பதால்
 • சூடியிருக்கும் மலர்மாலை வாடியிருப்பதால்
 • இவன்தான் உண்மையான நளன் என்று தெரிந்துகொண்டாள்
 • தேவர்களின் கண் இமைக்காது (இமைக்காத கண் கொண்டவர் இமையார்)
 • விண்ணுலகில் வாழும் அவர்களின் கால் நிலத்தில் தோயாது
 • சூடிய மலர்மாலை வாடா

கீழ்க்கண்ட செய்யுள் ஆசிரியப்பாவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஆண்கள் உலகம்!

பாடியவர்: ஒளவையார். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. (ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்)

நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

கீழ்க்கண்ட திருவாய்மொழி செய்யுள் கலிப்பாவிற்கு ஓர் எடுத்துக்காட்டு

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.

பின்வரும் இராவண காவியம் வஞ்சிப்பா வுக்கு ஓர் எடுத்துக்காட்டு

வளையாடு மலர்ச்சுனை நீரினிடை
வளையாடுகை மங்கைய ரன்னமென
விளையாடுவ ரோடுவர் கூடுவர்பின்
விளையாடுவர் பைங்கிளி மேவுறவே.

 அணி இலக்கணம்

அணி என்றால் என்ன?

அடி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருள் அழகும் சொல்லழகும் தோன்ற கவிதைகளை இயற்றிக் கற்போரை மனம் குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணி இலக்கணம் ஆகும்.

அணி இலக்கணத்திற்கு என்று பல நூல்கள் உதாரணமாகக் கொள்ளலாம். அவை தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகும். அணிகள் பல. உவமை அணி குறித்து இன்று கற்போம்.

   ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
   பேரறி வாளன் திரு.

ஊர் நடுவே உள்ள குளம் நிரம்பினால் போன்றதே உலக உயிர்களை எல்லாம் விரும்பி உதவிசெய்யும் பேரறிவு உடையான் இடம் சேர்ந்த செல்வம்.

இப்பாடலில் ஊருணி நீர் நிறைதல் என்பது உவமை. உலகவாம் பேரறி வாளன் திரு என்பது உவமேயம். அற்று என்பது உவம உருபு.

இவ்வாறு உவமை உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு பாடுவது உவமை அணி ஆகும்.