சென்ற இலக்கணக்குறிப்பு இடுகுறிப் பெயரும் காரணப் பெயரை பற்றியும் விரிவாக கண்டோம். இதில் நாம் அறுவகை பெயர்ச்சொற்கள் என்ற தலைப்பில் பெயர்ச் சொற்கள் என்றால் என்ன அது எங்கே பயன்படுகிறது அதில் எத்தனை வகைப்படும் என்று விரிவாக பல கோணங்களில் காண்போம்.

பெயர்ச்சொற்களை தமிழ் இலக்கணத்தில் அறுவகைப் படுத்துவர். அவை பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர், என்பனவாம்.

1. பொருட்பெயர் என்றால் என்ன?

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட் பெயர், இந்த இருவகை உண்டு. உயிருள்ள பொருள் பெயர், உயிரற்ற பொருள் பெயர் என்பனவாம்.

உயிருள்ள பொருள்கள் குமரன், மலர்கொடி, ராஜா, சாஸ்தா, தேவா, தென்னை, செம்பருத்தி, வெள்ளாடு, முதலை…. இன்னும் பல.

உயிரற்ற பொருள்கள் நாற்காலி, அடுப்பு, கடிகாரம், தட்டு, வெண்கலப் பானை, எண்ணெய், மண், நீர், காற்று, மற்றும் பல.

2.இடப்பெயர் என்றால் என்ன?

ஓரிடத்தை குறிபபது இடப்பெயர் ஆகும்.

உதாரணத்திற்கு வீடு, தெரு, பள்ளி கோவில், மக்கள் வாழிடம் ,தோட்டம், காடு, மலை, குன்று, என இடங்களை குறிப்பன வெல்லாம் இடப்பெயர் தான்.

3.காலப்பெயர் என்றால் என்ன?

கண் இமைக்கும் நொடிப்பொழுது முதல் ஊழிக்காலம் வரை எல்லாமே காலத்தை குறிக்கும் பெயர்கள் தான்.

சான்றாக நொடி, வினாடி, மணி, பொழுது, கிழமை, வாரம், திங்கள், ஆண்டு, பருவ காலம் என எல்லாமே காலப் பெயர்கள் தான். இதற்கு எடுத்துக்காட்டாக பத்து நொடி, 50 வினாடி, பதினோரு மணி, விடியற்காலை, செவ்வாய்க்கிழமை, இரண்டு வாரம் மாசித் திங்கள் மழைக்காலம்.

4.சினைப்பெயர் என்றால் என்ன?

சினை என்பது ஒன்றின் உறுப்பின் பெயரைக் குறிப்பது மனித உறுப்புகள் விலங்கு உறுப்புகள் தாவர பகுதிகள் பொருள்களின் பகுதிகள் என முழுமையான ஒன்றின் பகுதிகளைக் குறிக்கும் பெயர்கள் சினை பெயர்கள் ஆகும்.

கீழ்வரும் மனித உறுப்புக்களின் பெயர்களையும் தாவர பகுதியில் பெயர்களையும் பார்ப்போம் இவை அனைத்துமே சினை பெயர்களாம்.

தலை, கண், மூக்கு, செவி, நாக்கு, பல், வயிறு, கை, கால், விரல், நகம், முதலியன வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி, விதை, முதலியன சினைபெயர்கள் ஆகும்.

5.பண்புப்பெயர் என்றால் என்ன?

குணப்பெயர் ஐ பண்புப்பெயர் எனவும் கூறுவர். குணப் பெயர்கள் நிறம் சுவை அளவு வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் ஏழு நிறங்கள் அறுசுவைகள் இவை அனைத்தும் பண்புப் பெயர்களாம். உதாரணத்திற்கு 15 மீட்டர் துணி, இரண்டு லிட்டர் எண்ணெய், 10 கிலோ அரிசி, கரும்பலகை ,சதுர வீடு, செவ்வக புத்தகம், முக்கோண கூம்பு இவை அனைத்தும் பண்புப் பெயர்கள்.

6.தொழில் பெயர்கள் என்றால் என்ன?

செய்யும் தொழிலை குறிக்கும் பெயர்கள் எல்லாம் தொழில் பெயர்கள்.

உதாரணத்திற்கு படித்தல், கற்பித்தல், ஆடல், பாடல் இவை அனைத்தும் தொழில் பெயர்கள்.

இன்று அறுவகை பெயர்ச்சொற்களை பற்றி படித்தோம்.