ஆகுபெயர் என்றால் என்ன?

ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ள பெயரை ஆகுபெயர் என்று குறிப்பிடுவோம்.
ஆகுபெயர் āku-peyar , n. ஆகு- +. (Gram.) A name or word, which by long usage is secondarily applied to denote something connected with the thing originally denoted by it; ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றொன் றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.)
மேலே கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
அமெரிக்கா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
அமெரிக்கா வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு தொடர்களையும் படித்து பாருங்கள். இவை இரண்டிலும் பொதுவாக வந்துள்ள சொல் எது?
அது அமெரிக்கா என்பதாகும்.
இப்பொழுது அமெரிக்கா என்னும் சொல், மேலே குறிப்பிட்ட இரண்டு சொற்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தச் சொல் ஒரே பொருளைத் தருகிறதா என்று ஆராய்ந்தால் இல்லை என்பதே பதிலாகும். ஏனெனில் அவை இரண்டும் வெவ்வேறு பொருளைத் தருகிறது. முதல் தொடர் அமெரிக்கா வீரர்களையும் வீராங்கனைகளையும் குறிக்கிறது. இரண்டாம் தொடர் அமெரிக்கா இடத்தைக் குறிக்கிறது.
இப்பொழுது பார்க்கலாம் முதல் தொடரில் உள்ள அமெரிக்கா தன்னை குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வீரர்களையும் வீராங்கனைகளையும் குறிக்கிறது. ஒன்றல் இயற்பெயர் தன்னை குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு ஆகுபெயர் என்று பெயர். ஆகுபெயர் பலவகைப்படும்.

ஆகுபெயர் ஆறு வகைப்படும் அவை யாது?

  1. முதல் ஆகுபெயர்,
  2. இடவாகுபெயர்
  3. காலவாகு பெயர்
  4. சினையாகு பெயர்
  5. குணவாகு பெயர்
  6. தொழிலாகு பெயர்

முதல் ஆகுபெயர் என்றால் என்ன?

முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகி வருவது முதல் ஆகுபெயர் எனப்படும்.
இதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை பார்ப்போம்.
ஒரு பெண்மணி தலையில் மல்லிகை வைத்துள்ளார்.
மேற்கண்ட தொடரில் மல்லிகைப்பூ என்ற சொல்லைப் பார்ப்போம். மல்லிகை என்பது “பூ” இல்லை. அது கொடி. மல்லிகை வைத்துள்ளார் எனச் சொன்னால், அங்கு மல்லிகை என்பது கொடியாகிய முதற் பொருளைக் குறிக்காமல் “பூ” என்னும் சினையை குறிக்கிறது.
இவ்வாறு முதற்பொருள் சினைக்கு ஆகி வருவது, முதல் ஆகுபெயர் எனப்படும். இதனை பொருளாகு பெயர் எனவும் கூறுவதுண்டு.

இடவாகுபெயர் என்றால் என்ன?

 

முதற்பொருள் இடத்திற்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.

 
உதாரணத்திற்கு,
"நேற்று பேச்சுப் போட்டியில் திண்டுக்கல் பள்ளி முதற் பரிசை வென்றது" 
என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்வோம்.  இதில் திண்டுக்கல் பள்ளி என்ற சொற்களை உற்று நோக்குங்கள். திண்டுக்கல் பள்ளியா வந்து பேசியது? பள்ளி எப்படி பேசும்? அனைவரும் அறிவோம் பள்ளி பேசாது என்று. ஆனால் மேற்கொண்ட சொற்றொடரில் திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி முதல் பரிசை வென்றார் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.
 
ஆகவே பள்ளி என்னும் இடப்பெயர் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆகி வந்துள்ளது. ஆதலால் இது இடவாகு பெயர் ஆகும்.

காலவாகு பெயர் என்றால் என்ன?

 

முதற்பொருள் காலத்திற்கு ஆகி வருவது சினையாகு பெயர் ஆகும்.

 
கீழ்கண்ட இத்தொடரை நோக்குவோம்.
 
வெண்பா தலையில் திசம்பர் பூ வைத்துள்ளாள்.
 
மேலே குறிப்பிட்ட சொற்றொடரில் திசம்பர் என்பது என்ன? இது மாதத்தின் பெயர் என்று தெரியும். ஆனால் இத்தொடரில் பூக்கும் பூவிற்கு திசம்பர் என்று பெயர் உண்டு. ஆதலால் திசம்பர் என்னும் மாத பெயர் அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்துள்ளது. ஆதலால் இது காலவாகு பெயர் ஆகும்.
 

சினையாகு பெயர் என்றால் என்ன?

 
தமிழில் சினை என்றால் உறுப்பு எனப்படும். உதாரணத்திற்கு இந்த சொற்றொடரை பார்ப்போம்.
விவசாயி தன் இடத்தில் வெற்றிலை நட்டான். 
 
இந்த சொற்றொடரில் உள்ள வெற்றிலை என்பது சினை ஆகிய இலையை குறிக்காமல் அதன் முதற் பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது. அதனால் இது சினையாகு பெயர் ஆயிற்று.
 

குணவாகு பெயர் என்றால் என்ன?

உதாரணத்திற்கு இந்த சொற்றொடரை பார்ப்போம்.
தமிழர்கள் தமிழர் திருநாளை விமர்சியாக கொண்டாடுவர். திருநாளுக்கு முன் வீட்டு சுவர்களுக்கு வெள்ளை அடிப்பார்கள். 
இந்தச் சொற்றொடரை பார்ப்போம். வெள்ளை என்பது நிறப் பண்பு. ஆனால் அது நிலத்தை குறிக்காமல் சுண்ணாம்பை குறித்து வந்துள்ளது. ஆதலால் இது பண்பாகு பெயர் எனப்படும். இதனை குணவாகு பெயர் எனவும் கூறுவர்.
 

தொழிலாகு பெயர் என்றால் என்ன?

 
உதாரணத்திற்கு இந்த சொற்றொடரை பார்ப்போம்.
தமிழர்கள் தமிழர் திருநாள் அன்று பொங்கல் உண்பார்கள். 
இங்கு பொங்கல் என்ற சொல்லை கவனித்தால், அது பொங்குதல் ஆகிய தொழிற்பெயரை குறிக்கிறது. இத்தொழிற்பெயர் தொழிலை குறிக்காமல், அத்தொழிலால் ஆகும் உணவை குறிக்கிறது. ஆகவே இது தொழில் ஆகுபெயர் ஆகும்.