இந்திரப்பிரஸ்தம்

Chapter 8 புதிய தலைநகரத்தில் (இந்திரப்பிரஸ்தம்)

பாண்டவர்கள் தங்கள் தாயுடனும் பாஞ்சாலியுடனும் அத்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். கண்ணனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

எல்லோரும் காண்டவப் பிரஸ்தத் அடைந்தார்கள். அந்தப் பகுதி முழுமையும் அடர்ந்த காடாக இருந்தது. தலைநகரத்தை எங்கே அமைப்பது என்று ஆராய்ந்தார்கள்.

வியாச முனிவர் அங்கு வந்தார். தலைநகரத்திற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தார். இந்திரனுடைய உதவியால் பாண்டவர்கள் அழகிய நகரம் ஒன்றை அமைத்தார்கள். அதற்கு இந்திரப்பிரஸ்தம் என்று பெயர் வைத்தார்கள். இந்திரனுடைய அமராவதியை விட அந்த நகரம் அழகுடன் விளங்கியது.

அரியணையில் அமர்ந்த தருமன் நீதிநெறியுடன் ஆட்சி செய்து வந்தான்.

நாரத முனிவர் அங்கு வந்தார். 

“பாண்டவர்களே! நீங்கள் ஐவரும் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரே மனைவியால் உங்கள் ஒற்றுமை குலையக்கூடாது.

முன்னொரு காலத்தில் சுண்டன், உபசுண்டன் என்ற அசுரர்கள் இருந்தனர். அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு அவர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர். ஒன்றாக அரியணையில் அமர்ந்தனர். ஒன்றாக உண்டனர். ஒன்றாக உறங்கினர்.

 

திலோத்தமையின் மீது அவர்கள் இருவரும் காதல் கொண்டனர். யார் அவளை அடைவது என்று இருவரும் சண்டை செய்தனர். ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்த நிலை உங்களுக்கு வேண்டாம்” என்று அறிவுரை சொன்னார்.

பாண்டவர்கள் ஐவரும் என்ன செய்வது என்று ஆராய்ந்தனர். ஒவ்வொருவர் மாளிகையிலும் பாஞ்சாலி ஓராண்டு இல்லறம் நடத்தட்டும். அப்பொழுது மற்ற சகோதரர்கள் அங்கு செல்லக்கூடாது. செல்ல நேர்ந்தால் ஓராண்டு காட்டில் வாழ வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

தருமனின் மாளிகையில் பாஞ்சாலி இல்லறம் நடத்தி வந்தாள். அப்பொழுது அந்தணன் ஒருவன் அர்ச்சுனனிடம் வந்தான். “என் பசுக்களை கள்வர்கள் கவர்ந்து செல்கின்றனர். உடனே சென்று மீட்டுத் தர வேண்டும்” என்று வேண்டினான். 

தன் வில் தருமனின் மாளிகையில் இருப்பது அர்ச்சுனன் நினைவுக்கு வந்தது. அங்கு நுழைந்த அவன வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். பசுக்களை மட்டு அந்தணனிடம் ஒப்படைத்தான். தருமனிடம் வந்த அவன் நடந்ததை எல்லாம் சொன்னான். யார் தடுத்தும் கேளாமல் காட்டுக்குப் புறப்பட்டான்.

காட்டில் அர்ச்சுனனைக் கண்ணன் சந்தித்தார். தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றார். அங்கே கண்ணனின் தங்கை சுபத்திரையிடம் அர்ச்சுனன் காதல் கொண்டான். தன் எண்ணத்தைக் கண்ணனிடம் சொன்னான்.

“என் அண்ணன் பலராமன் உங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளமாட்டார். சுபத்திரையைத் தூக்கிச் சென்று திருமணம் செய்து கொள். பிறகு எல்லோரையும் அமைதிப்படுத்துவோம்” என்றார் கண்ணன்.

அதன்படியே சுபத்திரையைத் தூக்கிச் சென்று திருமணம் செய்து கொண்டான் அர்ச்சுனன். கோபம் கொண்ட பலராமனை அமைதிப்படுத்தினார் கண்ணன்.

துவாரகை திரும்பிய அர்ச்சுனனும் சுபத்திரையும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு அபிமன்யு என்ற மகன் பிறந்தான். அர்ச்சுனன் அபிமன்யுவுடனும், சுபத்திரையுடனும் இந்திரப் பிரஸ்தம் வந்தான்.

பாண்டவர்கள் ஐவருக்கும் பாஞ்சாலி ஒவ்வொரு மகனைப் பெற்றாள். அவர்கள் உப பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பாண்டவர்களைப் பார்ப்பதற்காகக் கண்ணன் இந்திரப் பிரஸ்தம் வந்தார். அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்தார்.

ஒரு முறை அவர் அர்ச்சுனனுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கே ஒரு மரத்தின் நிழலில் இருவரும் ஓய்வு எடுத்தனர். அப்பொழுது முதியவர் ஒருவர் அங்கு வந்தார். “நான் பசியால் வாடுகிறேன். எனக்கு வயிறார உணவிட வேண்டும்” என்று அவர்களிடம் வேண்டினார்.

“முதியவரே! நான் உங்கள் பசியைப் போக்குகிறேன்” என்று வாக்குறுதி தந்தான் அர்ச்சுனன். “நான் நெருப்புக்கடவுள். இந்தக் காண்டவக் காட்டை முழுமையாக உண்டால்தான் என் பசி தீரும். இதற்கு முன் பலமுறை இந்தக் காட்டை உண்ண முயன்றேன். இந்திரன் மேகங்களை அனுப்பி மழை பொழிந்து என்னை விரட்டி விட்டான்” என்றார் அவர்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நினைத்தான் அர்ச்சுனன். தன் வில்லிலிருந்து அம்புகளைச் செலுத்தினான். காண்டவக் காட்டைச் சுற்றி அந்த அம்புகள் வேலியாக அமைந்தன. அதே போல வானப் பரப்பிலும் வேலி அமைத்தான்.

காண்டவக் காட்டிலிருந்து யாரும் தப்பிச் செல்ல முடியாதபடி வேலி இருந்தது. “நெருப்புக் கடவுளே! உங்கள் விருப்பம் போலக் காட்டை உண்ணுங்கள். யாரும் தடுக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் அவன்.

நெருப்புக் கடவுள் காண்டவக் காட்டை எரிக்கத் தொடங்கினார். இதை அறிந்த இந்திரன் மேகங்களை அனுப்பினார். அவை கடுமையாக மழை பொழிந்தன. அர்ச்சுனனின் அம்பு வேலி கூரை போல இருந்தது. ஒரு மழைத் துளியும் காட்டிற்குள் விழவில்லை. காண்டவக் காட்டை முழுமையாக உண்டார் நெருப்புக் கடவுள். அவர் பசி தீர்ந்தது.

 

(தொடரும்…)