முன்னொரு காலத்தில் சோழ மன்னன் மிக அருமையாக தன் நாட்டை ஆண்டு வந்தான். தமிழ் மேல் தீராத காதல் இருந்தது. ஆதலால் அவன் அவைகளிலே பெரும் புலவர்கள் பல பேர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அரசனை மகிழ்விப்பதற்காக பலவித பாடல்களை கவிதைகளாக வடிவமைத்து அவனை புகழ்ந்து பாடினர்.ஒருநாள் அந்த சோழ மன்னன் தனது அவைக்களப் புலவர் களை அழைத்து, நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நான்கு கோடி பாடல்களை பாட வேண்டும் என்று கடுமையாக ஆணையிட்டான்.ஓர் இரவுக்குள் எப்படி 4 கோடி பாடல்களை பாடுவது என்று அந்தப் பெரும் புலவர்களே திகைத்து நின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவ்வைப் பாட்டியின் முன் வந்து மன்றாடினர்.அதைக்கேட்ட அவ்வைப்பாட்டி இதற்காகவா வருத்தப்படுவீர்கள். சிறிதும் கவலை வேண்டாம் நான் இப்பொழுதே 4 கோடி பாடல்களை பாடுகின்றேன். அதைப் போய் மன்னனிடம் சென்று அதை பாடுங்கள் என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார் அவ்வைப் பாட்டி. ஒரே ஒரு பாடல் எப்படி 4 கோடி பாடலுக்கு இணையானது வியப்பாக இருக்கிறதல்லவா? இதோ அந்த நான்கு கோடி பாடல்களைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்;உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்;கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்;கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.மேற்கூறிய தே அந்த பாடல். அதன் அர்த்தம் யாதெனில்,1) நல்ல பண்புகள் இல்லாத வரை அந்தப் பண்புகளை மதித்து நடக்காத வரை மதித்து அவர் வீட்டின் முன் மிதிக்காமல் இருப்பது நான்கு கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். அதாவது நம்மை மதிக்காதவர் இன் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது 4 கோடி பொன்னுக்கு இணையானது என்று பொருள் கூறுவார்கள் பெரியவர்கள்.2) விருந்தோம்பல் என்பது தமிழரின் மாண்பு உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாத அவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.3) நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் நட்புடன் இருப்பது அல்லது சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.4) பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.எப்படி அவ்வைப் பாட்டி தன்னுடைய ஆளுமையாலும், பண்பட்ட தமிழ் அறிவினாலும், மேம்பட்ட புலவர்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைத்தார். நாம் அனைவரும் அவ்வைப் பாட்டியின் அறிவுரையின்படி நடந்து வாழ்வில் மேன்மை பெறுவோமாக!–www.Tamiltutor.com