சென்ற என்னுடைய ப்ளாக்கில் சார்பு எழுத்துக்கள் பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் குற்றியலுகரம் குறித்து பேச இருக்கிறோம்.

 
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம். குறுமை என்றால் குறுகியது (shorter form) என்பது பொருளாகும். இயல் என்றால் ஓசை. உகரம் என்றால் “உ” என்ற எழுத்து.
 
Shortened “உ” having only half a māttrai found generally at the end of words,
 
என குறுகிய ஓசையுடையவை உகரம் குற்றியலுகரம் ஆகும்.
 
நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. குறுகிய ஓசையா என்பதுதானே? நான் ஏற்கனவே கூறியது போல் தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிக்கின்ற கால அளவு உண்டு. குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடில் எழுத்துக்கு இரண்டு மாத்திரை மற்றும் மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை என்னும் கால அளவில்தான் எழுத்துக்களை ஒலித்தல் வேண்டும்.
 
இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உகரம் குறில் ஆனதனால் ஒரு மாத்திரை கால அளவே ஒலித்தல் வேண்டும். ஆனால் அது ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரை கால அளவே ஒலிக்கும். அவ்வாறு ஒலிப்பதனைத்தான் குற்றியலுகரம் என தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
நீங்கள் கேட்பது மீண்டும் கேட்கிறது,  அஃது எங்கு எப்படி குறையும் என்று தானே?  சில சொற்களுக்கு இறுதியில் ஆறு வல்லின மெய் எழுத்துகளுடன் உகரம் “உ” சேர்ந்து ( க்+உ = கு; ச்+உ =சு; ட்+உ=டு; த் +உ =து; ப்+உ =பு; ற்+உ=று) வரும்பொழுது, அந்த உகரம் அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். கு, சு, டு, து, பு, று ஆகிய இந்த ஆறு எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும் ஆறு சில சொற்களை பார்ப்போம். இவை அனைத்துமே குற்றியலுகரம் ஆகும் ஏனெனில் இவை அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கிறது.
 
எடுத்துக்காட்டுகள்: காடு, பந்து, ஆறு, பாகு
 
மேலே கூறிய பசு எனச் சொல்லும் பொழுது, அச்சொல்லில் உள்ள “சு” ஒலியானது ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறது. “காசு” என்னும் சொல்லை ஒலிக்கும் பொழுது, அச்சொல்லில் உள்ள “சு” ஒலி அதற்குரிய ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல் குறைந்து ஒலிப்பதனை உற்றுக் கேட்டால் ஒளி வேறுபாட்டை நன்றாக அறிவீர்கள். இப்பொழுது இரு சொற்களையும் காசு மற்றும் பசுவை ஒலித்து கேளுங்கள். ஒலி வேறுபாட்டை உங்களால் நன்றாக உணர முடியும்.
 
குற்றியலுகரங்கள் கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு வல்லின எழுத்துக்கள் தனிநெடிலை சார்ந்து வரும் பொழுது, பல எழுத்துக்களைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும் பொழுது ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம், குற்றியலுகரம் எனப்படும். இதனை சொல்லீட்டு அயல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை ஆறு வகையாக பிரிக்கலாம்.
 
உதாரணத்திற்கு நாகு, காசு, ஆடு, மாது, கோபு, ஆறு இந்தச் சொற்களை ஒலித்துப் பாருங்கள். வல்லின மெய் எழுத்துக்களின் மேல் இந்த உகரம் (கு, சு, டு, து, பு, று)சொல்லின் இறுதியில் வந்துள்ளது எழுத்துககு முன் என்னென்ன எழுத்துக்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

நெடில் தொடர் குற்றியலுகரம்

 • உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் நான்கும் உயிர் நெட்டெழுத்துக்கள் இரண்டும் வந்துள்ளன. இவ்வாறு உயிர் நெடில் உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் அடுத்து வரும் உகரம் ஏறிய வல்லின எழுத்துக்கள் நெடில் தொடர் குற்றியலுகரம் எனலாம்.

ஆயுத தொடர் குற்றியலுகரம்

 • அதேபோல்  எஃகு, கஃசு, அஃது என்ற சொற்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சொற்களை ஒலித்துப் பாருங்கள். கு சு து என்னும் வல்லின மெய் எழுத்துக்கள் மேல் ஊர்ந்த உகரம் ஆனது ஆயுத எழுத்தை தொடர்ந்து வந்துள்ளது. அதனால் இது ஆயுத தொடர் குற்றியலுகரம் ஆகும்.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

 • அதேபோல் அழகு அரசு பண்பாடு  உருபு உனது பாலாறு இச்சொற்களை படித்துப்பாருங்கள். வல்லின மெய்கள் ஊர்ந்த உகர எழுத்துக்கள் கு, சு, டு, து, பு, று சொல்லின் இறுதியில் வந்துள்ளன. அவை அனைத்தும் உயிர் மெய் எழுத்துக்கள். ஆனால் இவ்விடத்தில் அவற்றை உயிர்மெய் எழுத்துக்கள் எனச் சொல்லக்கூடாது. ழ = ழ் + அ; ர = ர் + அ ; பா =ப்+ஆ எனப் பிரித்துப் பார்த்தல் வேண்டும். அப்படிப் பார்த்தால் உயிர் எழுத்துக்கள் வருகின்றன. அதனால் இதனை உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
 
 • மேலே கூறிய உதாரணங்களைப் பார்க்கும்பொழுது ஆடு என வந்தாள் நெடில் தொடர் குற்றியலுகரம் என்றோம். பாலாறு இங்கும் “று” என்னும் எழுத்துக்கு முன் “லா” வருகிறது. இதனையும் நெடில் தொடர் குற்றியலுகரம் என்று சொல்லாமல் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் சொல்வதேன்?
 
 • மேலே கேட்டது உங்களுடைய கேள்வி என்றால் மிகவும் அருமையாக கேட்டீர்கள். நெடில் தொடர் குற்றியலுகரம் என்பது கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துக்களை வீட்டில் கொண்டு “ஏடு”, “காசு” என ஈரெழுத்துச் சொல்லாகவே வரும். உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பது கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துக்களுக்கு முன் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை பெற்று வரும். ஈற்றயல் எழுத்து உயிர்மெய் குறிலாகவோ, நெடில் ஆகவும் இருக்கும்.

வன்றொடர்க் குற்றியலுகரம்

 • இதேபோல் “சுக்கு”, “பட்டு” இச்சொற்களை பாருங்கள் “கு”,” டு” ஆகிய எழுத்துக்களுக்கு முன் வல்லின மெய் எழுத்துக்கள் வந்துள்ளதால் இவை வல்லின தொடர் குற்றியலுகரம் ஆகும். வல்லுனர்கள் இதனை சுருக்கமாக வன்றொடர்க் குற்றியலுகரம் என குறிப்பிடுவர்.

மென் தொடர்க் குற்றியலுகரம்

 • அடுத்து “சங்கு”, “மஞ்சு”, “நண்டு”, “சந்து” இச்சொற்களை படித்துப்பருங்கள் இவை மென் தொடர்க் குற்றியலுகரம்.

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

 • அதுபோல் கொய்து சார்பு மூழ்கு இச்சொற்கள் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
 
இவ்வாறாக வல்லின மெய்கள் மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும் பல எழுத்துக்களை சார்ந்தும் வரும்பொழுது அது தனக்குரிய மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். இது தன் அயல் எழுத்தை நோக்க
 1. நெடில் தொடர் குற்றியலுகரம்
 2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
 4. வன்றொடர்க் குற்றியலுகரம்
 5. மென்றொடர்க் குற்றியலுகரம்
 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

நினைவில் கொள்ளுதல் வேண்டும்

 • கு சு டு து பு று என்பன வல்லின மெய்களின் மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுத்துக்கள்.
 • குற்றியலுகரத்துக்கு அரை மாத்திரை அளவு.
 • ஈற்று அய எழுத்தாகத் தனிநெடில் ஆயுதம் உயிர்மெய் வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை பெற்று வரும்.
 • நெடில் தொடர் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களை பெற்று வரும். ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை பெற்று வரும்.
 
நெடிலோடு ஆயுதம் உயிர்வலி மெலிஇடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிற மேல் தொடரவும் பெறுமே – நன்னூல் 94