செய்யுள் உறுப்புகள்

யாப்பு என்பது செய்யுள்.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறும் செய்யுளின் உறுப்புகள் ஆகும்.

எழுத்து எனப்படுவது யாது?

            செய்யுளில் குறில், நெடில், மெய், ஆயுதம் என்னும் எழுத்துக்கள் முதன்மையாக கருதப்படும். குறிலில், உயிர்க்குறிலும், உயிர்மெய்க்குறிலும் அடங்கும். நெடிலில், உயிர் நெடிலும், உயிர்மெய் நெடிலும் அடங்கும். மெய் “ஒற்று” எனவும் சொல்லப்படும். செய்யுளில் ஆயுதம் மெய்யாக கருதப்படும்.
நாணல் – இச்சொல்லில், நா – நெடில், ண – குறில்,  ல் – ஒற்றெழுத்து.

அசை

             எழுத்தானது தனியாகவோ பல சேர்ந்தோ ஓசையுடன் அசைந்து (பிரிந்து)  நிற்பது அசை எனப்படும். இது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

நேரசை:

குறில் தனித்தும் குறில் ஒற்றடுத்தும், நெடில் தனித்தும் நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
  1. குறில் தனித்து வரல்                                       – க
  2. குறில் ஒற்றுடன் வரல்                                     – கல்
  3. நெடில் தனித்து வரல்                                     – கா
  4. நெடில் ஒற்றுடன் வரல்                                   – கால்

நிரையசை:

குறில் இணைந்தும் குறில் இணைந்து ஒற்றும்; நெடில் இணைந்தும் குறில் நெடில் இணைந்து ஒற்றும் வருவது நிரையசை.
எடுத்துக்காட்டு:
  1. குறில் இணைந்து வரல்                                  – பட
  2. குறில் இணைந்து ஒற்றுடன் வரல்                  – படம்
  3. குறில் நெடில் இணைந்து வரல்                      – படா
  4. குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வரல்      – படாம்

சீர்

அசைகள் தனித்தும் இணைந்தும் கூடி, அடிக்கு உறுப்பாக அமைவது சீர் எனப்படும். அது ஓரசைச்சீர், ஈரசைச்சீர்,  மூவசைச்சீர், நாலசைச்சீர் என நால்வகைப்படும்.

ஓரசைச்சர்

வெண்பாவின் ஈற்றில் நேரசை, நிரையசையுள் ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும். அவற்றை ஓரசைச்சீர் என்பர். அவை நாள் (நேர்), மலர் (நிரை), காசு (நேர்பு), பிறப்பு (நிரைபு) என நால்வகை வாய்ப்பாடுகள் ஒன்றினை பெறும்.
எடுத்துக்காட்டு:
  • செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினும் என்.
    என் – நேர் (நாள்)
  • செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.
                                                                                     படும் – நிரை ( மலர்) 
  • நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு.
                                                                                    நாடு – நேர்பு (காசு)
  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
                                                                                    உலகு – நிரைவு (பிறப்பு)

ஈரசைச்சீர் – நான்கு

ஈரசை சேர்ந்து ஒரு சீர் ஆவது ஈரசைச்சீர். நேரில் முடிவது இரண்டும், நிறையில் முடிவது இரண்டுமாக ஈரசைச்சீர் நான்கு ஆகும்.
சீர்                                                                   வாய்ப்பாடு
நேர் நேர்                                             =         தேமா. மாச்சீர் – 2 ( தேமா, புளிமா என மாவில் முடிவதனால் மாச்சீர்)
நிரை நேர்                                           =          புளிமா
நிரை நிரை                                         =          கருவிளம் விளச்சீர் -2 ( கருவிளம், கூவிளம் என விளத்தில் முடிவதால் விளச்சீர்)
நேர் நிரை                                           =          கூவிளம்
(ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவிற்கு உரியவை.)
இவை இயற்சீர் எனவும், ஆசிரிய உரிச்சீர் எனவும் வழங்கப்படும்.

மூவசைச்சீர் : எட்டு

மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது மூவசைச்சீர். நேரசையில் முடிவது நான்கும் நிரை அசையில் முடிவது நான்கு மாக மூவசைச்சீர் எட்டு ஆகும்.
காய்ச்சீர் கள் – நான்கு
நேர் நேர் நேர்                                     =           தேமாங்காய்
நிரை நேர் நேர்                                   =           புளிமாங்காய்
நிரை நிரை நேர்                                 =           கருவிளங்காய்
நேர் நிரை நேர்                                   =           கூவிளங்காய்
இவை வெண்பாவுக்கு உரிய அதனால் வெண்பா உரிச்சீர் எனவும் கூறுவர்.
கனிச்சீர் கள் – நான்கு
நேர் நேர் நிரை                                    =           தேமாங்கனி
நிரை நேர் நிரை                                  =           புளிமாங்கனி
நிரை நிரை நிரை                                =           கருவிளங்கனி
நேர் நிரை நிரை                                  =           கூவிளங்கனி
இவை வஞ்சிப்பா வுக்கு உரிய அதனால் வஞ்சியுரிச்சீர் எனவும் கூறுவர்.

நாலசைச்சீர் : பதினாறு

மூவசைச்சீர் எட்டுடன் நேரசை,  நிரையசைகளை தனித்தனியாகச் சேர்த்தால் நாலசைச்சீர் பதினாறு கிடைக்கும்.  இதனை பொதுச்சீர் எனவும் கூறுவர்.