எம்மை கவர்ந்த கவி - புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

எம்மை கவர்ந்த கவி பாவேந்தர் பாரதிதாசன்

“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!”

என்று தமிழ் காதல் கொண்டு “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர்; தமிழ்ச் சொல்லால் பாடல் இயற்றி, இருபதாம் நூற்றாண்டு கவிதை வானில் ஒளி நிலவாய் பவனி வந்த புரட்சிக் கவிஞராக விளங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

 
அறியாமை இருளில் முடங்கிக் கிடந்தவர்களை பகுத்தறிவு ஒளி பெற்று விழிப்புறச் செய்தார்; கொள்கையற்றவர்கள் ஐ கொள்கை உரம் பெற்று நிமிர்ந்து நிற்கச் செய்தவர் பாவேந்தர் அவர்கள்.

தோற்றம்

தோன்றின் புகழோடு தோன்றுக!
 
என்னும் பொய்யாமொழியாரின் பொன்மொழி கிணங்க, புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1891 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையாரின் பெயர் கனகசபை ஆகும். புரட்சிக் கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். இவர் துள்ளித் திரியும் தம் இளமைப் பருவத்தின் துடுக்கடக்கி பள்ளியில் சேர்ந்து தித்திக்கும் தமிழ் புலமை பெற்றார்; தமிழ் ஆசிரியராய் பணியாற்றினார்.
 
பாரதியாரால் சுப்புரத்தினம் ஓர் கவி என்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரின் எண்ணத்திலும் எழுத்திலும் பேச்சிலும் புரட்சியின் புதுத் துடிப்பை கண்ட அறிஞர் உலகம் அவரை புரட்சிக்கவிஞர் என அழைத்து தாலாட்டியது.
 

தமிழ்ப்பணி

பாவேந்தர் பாரதிதாசன் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழின் மறுமலர்ச்சிக்காகவும் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் புத்தெழுச்சி காண்பதற்காகவும் தமிழரின் முன்னேற்றத்திற்கு தடைக் கற்களாய் நிற்கும் அறியாமையை மூடப் பழக்க வழக்கங்களை உடைத்தெறிவதற்காவும் பாடுபட்டார். வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக்கூடெல்லம், ஏடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது தமிழ் பணியாற்றினார்.
 
சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது என்பதனை உணர்ந்த பாவேந்தர் புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் தமது சிந்தனையை செலவிட்டார். இவரது புகழை இசையமுது குடும்பவிளக்கு மணிமேகலை வெண்பா கண்ணகி புரட்சிக் காப்பியம் படித்த பெண்கள் இளைஞர் இலக்கியம் குறிஞ்சி திட்டு முதலிய நூல் மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன இன்றளவும்.
 
 

வொட்டாமல் இனிக்கும் இவரது பாடல் வரிகள் இங்கே உங்களுக்காக.

தமிழுக்கும் அமுதென்று பேர் !-அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !

தமிழுக்கு நிலவென்றுபேர்!-  இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !

தமிழுக்கு மணமென்று பேர் !- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !

தமிழுக்கு மதுவென்று பேர்!-இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!- இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!-இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!-இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!- இன்பத்

தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

 

பாரதிதாசன் தமிழ்க்கவி தமிழரின் கவி தமிழில் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி அக்கவியின் கவிதைகளை கற்று பயன் பெறுவோமாக அவரது பாடல்களை பாரெல்லாம் பரப்புவோம்.