புணர்ச்சி என்பது தமிழில் மிக அழகான ஒரு சொற்றொடர். இந்த சொற்றொடரை விரிவாக சென்ற பகுதியில் படித்தோம். மேற்கொண்டு இதனுடைய பல பிரிவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஒரு சிறிய வரலாற்று நிகழ்வை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

கவியரசு வேங்கடாசலம் அவர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். கேட்பவர் விரும்புமாறு நயமாகவும் அதே நேரத்தில் சிலேடையாகவும் பேசும் வல்லமை மிக்கவர். ஒரு முறை, திருவையாறு அரசர் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு கவியரசர் சென்றார். அவ்விழாவில், சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த ஒரு பேச்சாளர், ‘தமிழ் மொழியை இன்று செந்தமிழ் என்று சொல்கிறோம். செந்தமிழ் என கூறுவதனால், ஒரு காலத்தில் தமிழ் மொழி கொடுந்தமிழ் ஆக இருந்திருத்தல் வேண்டும்’ என்று கூறினார்.

அவர் கூறுவதைக் கேட்டு அந்த கவியரங்கம் கை தட்டியது ஆனால் அதனை கூர்ந்து கவனித்த கவியரசு வேங்கடாசலம், உடனே எழுந்து ‘கதிரவனை இந்நாளில் செஞ்ஞாயிறு என கூறுகிறோம். செஞ்ஞாயிறு என்பதனால், ஒரு காலத்தில் கருஞாயிறு என்றுதான் கூறி இருத்தல் வேண்டும் என்பதனை இப் பேச்சாளரின் கூற்று வெளிப்படுத்துகிறது எனக் கூறினார். அவர் கூறி அதனைக் கேட்ட தமிழறிஞர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மற்றொரு முறை, கவியரசரின் திருமண விழாவுக்கு வர இயலாத நண்பர், அவரை நேரில் கண்டு வருத்தத்தைத் தெரிவித்தார். பின்னர் அவரிடம், ‘திருமணம் சிறப்பாக நடந்ததா?’ என கவியரசர் வேங்கடாசலனாரிடம் வினவினார். நண்பருக்கு பதிலளித்த கவியரசர், ‘ஆம், மிகவும் நன்றாக நடந்தது. நான் ஒரு முகமதிய பெண்ணை மணந்து கொண்டேன்’ என்று கூறினார்.

அதனைக் கேட்ட நண்பர், வியப்புடன் கவியரசரை நோக்கினார். அவரது முக குறிப்பினை உணர்ந்துகொண்ட கவியரசர், ‘உண்மைதான். முகம் மதியம் போன்று விளங்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டேன்’ என சிலேடையாக கூற, நண்பரும் கவியரசரின் சொல்லாடலை கேட்டு மிகவும் இன்புற்றார்.

மேற்கண்ட இந்த கதையை படிக்கும் பொழுது, நமக்கு இதில் எத்தனை சொற்றொடர்கள் புணர்ச்சியை குறிக்கின்றன என்பதை கூர்ந்து நோக்குங்கள். இதில் வரும் இயல்புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி, உயிரீற்றுப் புணர்ச்சி, உடன்படுமெய், மற்றும் மெய்யீறறுப் புணர்ச்சி என்று பலச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே இந்த பிளாக்கில் உயிரீற்றுப் புணர்ச்சி, உடன்படு மெய் மற்றும் மெய்யீற்றுப் புணர்ச்சி பற்றி விரிவாக காண்போம். கடந்த பாடத்தில் நிலைமொழி பற்றியும் வருமொழி பற்றியும் கண்டோம். அதனைப் படிக்காதவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதனைப் படித்துவிட்டு இங்கே வரவும்.

உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பல பலா கறி தீ தொடர்களை ஒலித்துப் பாருங்கள். இச்சொற்களில் கடைசி எழுத்து உயிர்மெய் எனினும், உயிராக கொள்ளுதல் வேண்டும். பலா இச்சொல்லில் (ல் + ஆ = லா) ஆ என்பது உயிர்ஈறு தான்.

ஏற்கனவே முந்தைய பாடத்தில் கூறியதுபோல், உயிரீற்றுச் சொல்லினும் வல்லின எழுத்துக்கள் வந்தால், அதன் மெய்யெழுத்து மிகும்.

உதாரணங்கள்:

பலா + சுவை = பலாச்சுளை
பனி + போர் = பனிப்போர்

உடன்படு மெய் என்றால் என்ன?

நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி உயிரும் இணையும்போது வ் அல்லது ய் இடையில் தோன்றும். இதற்கு உடம்படுமெய் என்பது பெயர்.

சென்ற பிளாக்கில் நிலைமொழி ஈறு, வருமொழி முதல் பற்றி கற்றோம்! நிலைமொழி ஈறு உயிராகவும், வருமொழி உயிராகவும் இருந்தால், எவ்வாறு புணரும் என்பதனை இந்த பதிவில் காண்போம்.

கீழ்க்கண்ட சொற்கள் உயிர் ஈற்றுச் சொற்கள் ஆகும்.

பல, மணி, அண்ணி, பூ, பனை, வீடு, பசு, அழகு, பிள்ளை, பள்ளி.

கீழ்க்கண்ட சொற்கள் உயிர்முதல் சொற்களாகும்.

அணில், ஏணி, ஏற்றம், ஐவர், இரும்பு, ஈயம், உண்டு, உயிர், ஊர்வலம், ஓடு.

மணியடி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதனை மணி + அடி என்று அழகாக பிரிக்கலாம். இதில் மணி என்பது நிலைமொழி ஆகும். இதன் ஈறு (ண் + இ) உயிர். 'அடி' என்பது வருமொழி. அதன் முதல் எழுத்து உயிர் எழுத்தான 'அ' ஆகும். இவ்விரண்டும் ஒன்றாக 
சேரும் பொழுது, மணி + அடி = மணி + ய் + அடி = மணியடி என இணையும்போது, இடையில் 'ய்' என்னும் மெய் தோன்றி, மணியடி என்று சொல்லாகியது. இதேபோல் பூவழகு என்ற சொல்லும் வரும்.

இதுபோல் பல சொற்களை இங்கே உங்கள் முன் எடுத்துக்காட்டாக கூற இருக்கின்றேன். அவை யாதெனில் கிளியழகு, பனையோலை, திருவாரூர், குணவழகி, கோவில், தேவாரம் ஆகும். நீங்கள் மேற்கொண்ட எழுத்துக்களை பயிற்சி செய்து பிரித்துப் பாருங்கள்.

மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன?

கடந்த பகுதியில் புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி ஆகிய சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்டோம். மேலும் சில புணர்ச்சி முறைகளைப் பார்ப்போம். ‘நூல்+ ஆடை’ என்பதனில், நூல் என்பது நிலைமொழி. ஆடை என்பது வருமொழி. இதில் நூல் என்னும் நிலைமொழியின் ஈறு மெய் எழுத்து ஆகும்.

இதேபோல் மெய்யீற்று நிலை மொழிமுன், உயிர்முதல் வருமொழிச்சொற்கள் வந்தால், எவ்வாறு புணரும் என்பதை பார்ப்போம்.

அணில், ஆடை, இலை இவை அனைத்துமே உயிர் முதல் சொற்கள் ஆகும். கடந்த உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், பால் + ஆடை என்பதனில், பால் மெய்யீற்று நிலை மொழிமுன், உயிர்முதல் வருமொழிச்சொற்கள் (ஆடை) சேரும் பொழுது, மெய் உயிரோடு சேர்ந்து பாலாடை என்றாகிறது. ஏனெனில், மெய் தனித்து இயங்காது; உயிருடன் சேர்ந்துதான் இயங்கும். இதுவே இயல்பு.

உதாரணங்கள்

மலரடி, கனலெரி, கடலோரம் ஆகிய சொற்கள். இதனை நீங்கள் பிரித்து அறிந்து பயிற்சி செய்து பார்க்கவும்.