பெயர்ச்சொல் : மூவிடப் பெயர்கள்

 

பெயர்ச்சொல் peyar-c-col , n. id. +. (Gram.) Noun or pronoun, one of four parts of speech; நால்வகைச்சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குஞ் சொல்.

வேற்றுமை உருபேற்கும்போது திரியும் பெயர்கள்

 

வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன. இவற்றைக் குறித்து முந்தைய ப்ளாக்கில் தெளிவாகப் படித்திருப்பீர்கள். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடப் பெயர்களை ஏற்றுவரும்போது எவ்வாறு திரியும் என்பது குறித்துக் காணலாம். 

 

தன்மைப் பெயர்கள்

 

நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்.

நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள். 

 1. யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது என் எனத்

திரியும்.

 

யான்

 • ஐ   – என்னை
 • ஆல் – என்னால் 
 • கு – எனக்கு 
 • இன் – என்னின்
 • அது  எனது
 • கண் – என்கண்

 

 1. யாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது எம் எனத்

திரியும். 

 

எம்மை, எம்மால், எமக்கு, எம்மின், எமது, எங்கண் என வரும். 

 

 1. நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் நம் எனக் குறுகும். 

நம்மை , நம்மால், நமக்கு, நம்மின், நமது, நங்கண் எனக் குறுகி வரும். 

 

 1. யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது எங்கள் எனத் திரியும். எங்களை, எங்களால், எங்களுக்கு, எங்களின், எங்களது எனத் திரிந்து வரும்.

 

முன்னிலைப் பெயர்கள்

நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன முன்னிலைப் பன்மைப் பெயர்கள். 

 

 1. நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நின் எனவும், உன் எனவும் மாறும்.

 

நீ

 

 • ஐ – நின்னை, உன்னை 
 • ஆல் – நின்னால், உன்னால் 
 • கு – நினக்கு, உனக்கு 
 • இன் – நின்னின், உன்னின் 
 • அது – நினது, உனது
 • கண் – நின்கண், உன்கண் 

 

 1. நீர் என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நும், உம் எனத்

திரியும். 

 

நும்மை, நம்மால், நுமக்கு, நும்மின், நுமது, நும்கண்; 

உம்மை , உம்மால், உமக்கு, உம்மின், உமது, உம்கண். 

 1. நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நுங்கள், உங்கள் என மாறுபடும். 

 

நுங்களை, நுங்களால், நுங்களுக்கு, நுங்களின், நுங்களது;

உங்களை, உங்களால், உங்களுக்கு, உங்களின், உங்களது. 

 

படர்க்கைப் பெயர்கள்

 

தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது கீழ்க்காணுமாறு திரியும். 

 

 1. தான் என்னும் படர்க்கை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது தன் என மாறும்.

தான்

 • ஐ   – தன்னை
 • ஆல் – தன்னால் 
 • கு – தனக்கு 
 • இன் – தன்னின்
 • அது  தனது
 • கண் – தன்கண்

 

 1. தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் தம் எனத் திரிந்து வேற்றுமை

உருபேற்கும்.

 

தம்மை, தம்மால், தமக்கு, தம்மின், தமது, தங்கண். 

 

 1. தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர் தங்கள் எனத் திரியும். 

 

தங்களை, தங்களால், தங்களுக்கு, தங்களின், தங்களது, தங்கண்.

 

தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம் 

நீ நீர் என்எம் நின்னும் ஆம்பிற 

குவ்வின் அவ்வரும், நான்கு ஆறு இரட்டல் – நன்னூல், 247