Chapter 14 - Mahabharatham - Viradam

அத்தியாயம் 14 விராட நகரத்தில் 

தம்பியர் யாரும் திரும்பாததைக் கண்டான் தருமன். தண்ணீரைத் தேடிப் புறப்பட்டான். ஒரு பொய்கையைக் கண்டு அருகே சென்றான். அதன் கரையில் தம்பியர் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டான்.

அந்தக் காட்சியை அவனால் தாங்க முடியவில்லை. தானும் சாவோம் என்று பொய்கை நீரைக் கைகளில் எடுத்தான்.

அப்பொழுது வானிலிருந்து ஒரு குரல் “தருமா!, என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல். பிறகு தண்ணீரைக் குடிக்கலாம். இல்லையேல் தம்பிகளுக்கு ஏற்பட்ட முடிவுதான் உனக்கும் ஏற்படும்” என்றது.

“கேள்விகளைக் கேள்” என்றான் தருமன்.

வானிலிருந்து எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் தகுந்த பதில்களைச் சொன்னான். “தருமா! நான் ஒரு யட்சன் உன் பதில்களால் மகிழ்ந்தேன். உன் தம்பியரில் ஒருவருக்கு உயிர் தருகிறேன். யார் உயிர் பெற வேண்டும்?”, என்று கேட்டது அந்தக் குரல்.

“யட்சனே! நகுலன் உயிர் பிழைக்கட்டும்”

“தருமா! உன் அன்பிற்கு உரியவன் பீமன். வில்லாற்றலில் சிறந்தவன் அர்ச்சுனன். இவர்களை விட்டு நகுலனை ஏன் கேட்டாய்?”

“யட்சனே! என் தந்தைக்கு இரண்டு மனைவியர்கள். குந்தியின் மகன்களில் நான் ஒருவன் உயிரோடு இருக்கிறேன். அதே போல மாத்ரியின் மகன் உயிரோடு இருக்க வேண்டும். அதனால் நகுலனின் உயிரைக் கேட்டேன்”

“தருமா! உன் நேர்மையைப் பாராட்டுகிறேன். உன் தம்பியர் நால்வருக்கும் உயிர் தருகிறேன். இன்னும் ஏதேனும் ஒரு வரம் கேள். தருகிறேன்”

“யட்சனே! நாங்கள் மறைந்து வாழ வேண்டிய ஓராண்டு வருகிறது. அப்பொழுது எங்களை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது. இந்த வரம் தாருங்கள்”

“தருமா! அப்படியே தந்தேன். அந்த ஓராண்டில் நீங்கள் விரும்பிய வடிவம் பெறலாம். விராட நகரத்தில் தங்குங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும்” என்றது அந்தக் குரல்.

பாண்டவர்கள் நால்வரும் உயிர் பெற்றனர். மறைந்து வாழ வேண்டிய நாள் நெருங்கியது. அவர்கள் மத்சய நாட்டிற்குள் நுழைந்தார்கள். தொலைவில் விராட நகரம் அவர்களுக்குத் தெரிந்தது.

வழியில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் தங்கள் படைக் கருவிகளை மறைத்து வைத்தார்கள். எந்த வேடத்தில் விராட நகரத்திற்குள் செல்வது என்று முடிவு செய்தார்கள். முதிய அந்தணன் வடிவத்தில் அரசவைக்கு வந்தான் தருமன்.

அவனின் பெருமிதமானத் தோற்றத்தைக் கண்ட விராட அரசன் “நீங்கள் யார்?” என்று கேட்டான். “அரசே! என் பெயர் கங்கன். சதுரங்க ஆட்டத்தில் வல்லவன். பேரரசர் தருமருக்குத் துணையாக இருந்தேன். அவர் நாடு இழந்ததால் வேலை தேடி இங்கு வந்தேன்” என்றான் தருமன்.

“அறிவுரை சொல்பவராக என்னுடனே – தங்கி இருங்கள்” என்றான் அரசன்.

அடுத்ததாகப் பீமன் அங்கே வந்தான். வல்லாவின் என்ற பெயரில் சமையல்காரனாகச் சேர்ந்தான். அரசி சுதேட்சணையிடம் பணிப் பெண்ணாகச் சேர்ந்தாள் பாஞ்சாலி.

 

ஆணும் பெண்ணும் அல்லாத அலி வடிவத்தில் வந்தான் அர்ச்சுனன். “நான் ஆடல் கலையிலும் பாடல் கலையிலும் வல்லவள். என் பெயர் பிருக்கன்னளை” என்றான்.

தன் மகள் உத்தரைக்கு அவனை ஆசிரியராக நியமித்தான் அரசன். நகுலனுக்கு குதிரை லாயத்தில் வேலை கிடைத்தது. அரசனின் பசுக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சகாதேவனுக்குக் கிடைத்தது. அங்கே அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் பத்து மாதங்கள் கழிந்தன. 

அரசியின் தம்பி கீசகன் அங்கே படைத் தலைவனா இருந்தான். வலிமை வாய்ந்த அவன் கொடியவனாகவும் இருந்தான். அரசனும் மற்றவர்களும் அவனைப் பார்த்து நடுங்கினார்கள்.

பணிப் பெண்ணாக இருந்த பாஞ்சாலியைப் பார்த்தான் அவன். அவள் அழகில் மயங்கினான் அவன். அவளைக் கட்டி அணைக்க முயன்றான். அந்தக் கொடியவனின் பிடியிலிருந்து தப்பித்தாள் பாஞ்சாலி. அழுது புலம்பியபடி அரசவைக்கு ஓடி வந்தாள். “அரசே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினாள்.

அங்கே வந்த கீசகன் அவள் கூந்தலைப் பிடித்து இழுத்தான். அவளை எட்டி உதைத்தான். யாரும் அவனைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. இந்தக் கொடுமையைப் பார்த்து அரசன் நடுங்கினான். யாரையும் மதிக்காமல் கீசகன் அங்கிருந்து சென்றான்.

அன்றிரவு பீமனைத் தனியே சந்தித்தாள் பாஞ்சாலி. தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி அழுதாள். கோபம் கொண்ட பீமன், “நாளைய இரவு கீசகனை நாட்டிய அரங்கத்திற்கு வரச் செய். அவனைக் கொல்கிறேன்” என்றான். 

மறுநாள் பாஞ்சாலியிடம் வந்த கீசகன் – என்னை எதிர்ப்பவர் யாரும் இல்லை. எனக்கு நீ இணங்கித்தான் ஆ வேண்டும்” என்றான். 

இனிமையாகப் பேசிய பாஞ்சாலி யாரும் அறியாமல் இன்றிரவு நாட்டிய அரங்கத்திற்கு வாருங்கள். எண்ணம் நிறைவேறும்” என்றாள். நாட்டிய அரங்கத்திற்கு வந்த அவனைக் கொன்றான் பீமன். அரசரிடம் வந்த பாஞ்சாலி “என்னைக் காக்கும் கந்தவர்கள் கீசகனைக் கொன்று விட்டார்கள்” என்றாள். 

குருதி வெள்ளத்தில் கீசகன் கிடப்பதைப் பார்த்து அரசரும் மற்றவர்களும் திகைத்தார்கள்.