Chapter 12 கானக வாழ்க்கை

Chapter 12 கானக வாழ்க்கை

வனவாசத்திற்குப் புறப்படப் பாண்டவர் தயாரானார்கள். விதுரரின் மாளிகையில் குந்தி தங்கினாள். இளம் பாண்டவர்களைக் கண்ணன் தன்னுடன் துவாரகை அழைத்துச் சென்றார்.

பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் காட்டிற்கு சென்றார்கள். வெகு தொலைவு நடந்த அவர்கள் சரசுவதி ஆற்றங் கரையை அடைந்தார்கள். அங்குள்ள காம்யக காட்டில் (கானகத்தில்) தங்கினார்கள். 

மகன்களுக்குக் கொடுமையான முடிவு ஏற்படப் போகிறது. வன வாசம் முடிந்து திரும்பும் பாண்டவர்கள் அவர்களைக் கொல்லப் போகிறார்கள் என்று கலங்கினான் திருதராட்டினன்.

“விதுரா! இப்பொழுது நான் என்ன செய்வது?” என்று கேட்டான்.

“பாண்டவர்களைத் திரும்ப வரவழையுங்கள் அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படையுங்கள். உங்கள் மகன்களைக் காப்பாற்ற இதுதான் ஒரே வழி” என்றார்  விதுரர். 

கோபம் கொண்ட திருதராட்டினன், “எனக்காகவோ என் மகன்களின் நன்மைக்காகவோ நீ பேசுவது இல்லை. எப்பொழுதும் பாண்டவர் பக்கமே பேசுகிறாய். இங்கிருந்து எங்காவது போய்விடு” என்று எரிச்சலுடன் சொன்னான்.

அங்கிருந்து புறப்பட்ட விதுரர் பாண்டவர்கள் தங்கியிருந்த காட்டிற்கு வந்தார். அவர்கள் இருந்த நிலையைப் பார்த்தார். பெருமையுடன் அரச வாழ்வு வாழ்ந்தவர்கள். காட்டில் துன்பப்படுகிறார்களே என்று உள்ளம் நொந்தார்.

அங்கே திருதராட்டினன் விதுரனிடம் ஏன் கோபமாகப் பேசினேன். அவன் என் நல்லதற்குத் தானே சொன்னான். பிள்ளைப் பாசம் என் அறிவை மறைத்து  விட்டதே என்று வருந்தினான். 

தேரோட்டி சஞ்சயனை அழைத்த அவன், “காட்டிற் சென்று விதுரனை நான் அழைத்ததாகச் சொல்” என்றான். சஞ்சயனும் விதுரரைச் சந்தித்து நடந்ததைச் சொன்னான். தமையன் மீது அன்பு வைத்திருந்த விதுரர் அத்தினாபுரம் திரும்பினார்.

பாண்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக கண்ணன் காட்டிற்கு வந்தார். தலைவிரி கோலமாக இருந் பாஞ்சாலி, “கண்ணா ! தாங்க முடியாத அவமானங்கள் பட்டுவிட்டோம்” என்று கதறி அழுதாள்.

உணர்ச்சி வயப்பட்ட கண்ணன் “பாஞ்சாலி! அழாதே நீ அழுததற்கு மேலாகக் கௌரவர்களின் மனைவியர்கள் அழப் போகிறார்கள். அதைப் பார்க்கக் கௌரவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என்றார். 

கானக வாழ்க்கையில் பாண்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கழிந்தன. வியாச முனிவர் அங்கு வந்தார்.  “அர்ச்சுனா! நீ கைலாய மலைக்குச் செல். சிவ பெருமான நினைத்துத் தவம் செய். பாசுபதாஸ்திரம் பெற்று வா, உனக்குப் பேராற்றல் கிடைக்கும்” என்றார். 

அதன்படியே அர்ச்சுனன் கைலாய மலையை அடைந்தான். அங்கே கடுமையாகத் தவம் செய்தான். அவனுடைய தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் பாசுபதாஸ்திரத்தைத் தந்து அருளினார்.

இதை அறிந்த இந்திரன் அங்கு வந்தார். அர்ச்சுனனைப் பாராட்டித் தன்னுடன் இந்திர உலகிற்கு அழைத்துச் சென்றான். அங்கே நாட்டியத்தைப் இசையையும் அர்ச்சுனன் கற்றுக் கொண்டான்.

ஆண்டுகள் பல சென்றும் அர்ச்சுனன் திரும்பவில்லையே அவனுக்கு என்ன நேர்ந்ததோ என்று பாண்டவர்கள் வருந்தியபடி இருந்தார்கள். திரும்பி வந்த அர்ச்சுனன் உடன் பிறந்தவர்களை வணங்கினான். “என் முயற்சி முழுமையும் வெற்றி” என்றான். இதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

பன்னிராண்டாம் ஆண்டு தொடங்கியது. காம்யக காட்டிலிருந்து புறப்பட்ட அவர்கள் த்வைத வனத்தில் தங்கினார்கள்.

அங்கே துரியோதனன், இரண்டு ஆண்டுகளில் பாண்டவர்கள் திரும்ப வந்து ஆட்சியைக் கேட்பார்களே, மறைந்து வாழும் ஓராண்டில் எப்படியும் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். மீண்டும் காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தான்.

ஒற்றர்களை அழைத்த அவன், “நீங்கள் பாண்டவர்களை நிழல் போலத் தொடருங்கள். அவர்களைப் பற்றிய செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று கட்டளை இட்டான்.

த்வைத வனத்தில் பாண்டவர்கள் தங்கி உள்ளனர் என்பதை அறிந்தான் துரியோதனன். சகுனியிடம் அவன், “பாண்டவர்களைக் கேலி செய்து மகிழ என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.

“துரியோதனா! இந்த உலகத்திலேயே கொடுமையானது பகைவனுடைய செல்வச் செழிப்பைக் காண்பதுதான். நாம் விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொள்வோம். நாட்டியப் பெண்களுடன் சென்று அவர்கள் எதிரில் ஆரவாரமாகத் தங்குவோம். அவர்கள் உள்ளம் வெதும்புவதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம்” என்றான் சகுனி.

அங்கிருந்த கர்ணனும் இதற்கு ஒப்புக் கொண்டான் பெரும் ஆரவாரத்துடன் கௌரவர்கள் த்வைத வனத்தை அடைந்தார்கள். தங்களுக்கு எரிச்சலை உண்டாக்கவே அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது பாண்டவர்களுக்கு புரிந்தது.

அங்கே அழகான பொய்கை ஒன்று இருந்தது. அது சித்திரசேனன் என்ற கந்தர்வனுக்குச் சொந்தமானது. அந்தப் பொய்கையில் இறங்கிய கௌரவர்கள் கும்மாளமிட்டு நீராடத் தொடங்கினார்கள்.