அத்தியாயம் 13 பொறாமையின் விளைவு

அத்தியாயம் 13 பொறாமையின் விளைவு

அனுமதி பெறாமல் நீராடுகிறார்களே என்று கோபம் கொண்டான் சித்திரசேனன். கந்தர்வ வீரர்களுடன் வந்த அவன் – கௌரவர்களைத் தாக்கத் தொடங்கினான். அவர்களை எதிர்க்க முடியாமல் கர்ணனும் மற்றவர்களும் தோற்று ஓடினார்கள்.

துரியோதனனையும் அவனுடன் இருந்த பெண்களையும் சிறைப்படுத்தினான் சித்திரசேனன். அவர்களைக் கந்தர்வ உலகம் தூக்கிச் செல்ல முயன்றான்.

தப்பிய வீரர்கள் சிலர் தருமனிடம் வந்து நடந்ததை சொன்னார்கள். “பீமா! நீயும் அர்ச்சுனனும் சென்று துரியோதனனை விடுதலை செய்யுங்கள்” என்றான் தருமன்.

அண்ணனின் கட்டளையை மீற விரும்பாத அவர்கள் புறப்பட்டார்கள். அர்ச்சுனனை எதிர்க்க முடியாமல் சித்திரசேனன் கந்தர்வர்களுடன் ஓடி மறைந்தால் துரியோதனன் விடுதலை பெற்றான்.

“இப்படி விடுதலை பெற்றதை விட கந்தர்வள் கையாலேயே இறந்து இருக்கலாம். அவமானத்துடம் வாழ்வதை விட சாவதே மேல்” என்று புலம்பினான் துரியோதனன். அங்கு வந்த கர்ணனும் – துச்சாதனனும் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். பிறகு அவர்கள் அத்தினாபுரம் திரும்பினார்கள்.

துரியோதனனை மகிழ்ச்சிப்படுத்த நினைத்தான் கர்ணன். “இராசசூய வேள்வி செய்ததால்தான் பாண்டவர்கள் புகழ் பெற்றார்கள். அந்த வேள்வியை நீங்களும் செய்யுங்கள். எந்தத் தடையும் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். 

துரியோதனனும் இதற்கு ஒப்புக் கொண்டான். இராசசூய வேள்விக்கான ஏற்பாடுகள் நடந்தன. எல்லா நாட்டு அரசர்களும் வேள்வியில் கலந்து கொண்டனர். வன வாசத்தில் இருந்ததால் பாண்டவர்கள் அங்கு வரவில்லை. 

வேள்வி சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. அரசர்கள் அனைவரும் துரியோதனனைப் பாராட்டி விடை பெற்றார்கள். மகிழ்ச்சி அடைந்த துரியோதனன் “கர்ணா! உன் வலிமையால்தான் இத்தகைய பெருமையைப் பெற முடிந்தது. உன் உதவியால் எதிரிகளே இல்லாமல் வாழப் போகிறேன்” என்று பூரிப்புடன் சொன்னான். 

” பெருமையுடன் கர்ணன், “நான் போரில் அர்ச்சுனனைக் கொல்வேன். இது உறுதி” என்றான். இதைக் கேட்ட கௌரவர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

அங்கே கானகத்தில் பாண்டவர்களுக்குப் பன்னிரண்டாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாடச் சென்று இருந்தனர். பாஞ்சாலி மட்டும் தனியே இருந்தாள். துரியோதனனின் தங்கை கணவனான ஜயத்ரதன் அந்த வழியாக வந்தான். பாஞ்சாலியைக் கண்ட அவன், அவள் அழகில் மயங்கினான். அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றான். 

வேட்டை முடிந்து பாண்டவர்கள் திரும்பினார்கள். அழுது புலம்பிய பாஞ்சாலியின் தோழி நடந்ததை அவர்களிடம் சொன்னாள்.

கோபத்துடன் விரைந்து சென்ற பீமன் ஜயத்ரதனைத் தாக்கிச் சிறைபிடித்தான். அங்கு வந்த தருமன், “பீமா! இவன் உறவினன். நமக்குத் தீங்கு செய்தாலும் நாம் பதிலுக்கு தீங்கு செய்யக் கூடாது. இவனை விட்டுவிடு” என்றான்.

கோபம் அடங்காத பீமன் ஜயத்ரதனின் தலைமுடியை அலங்கோலமாக வெட்டினான். “பிழைத்துப் போ” என்றான். எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்குப் பாண்டவர்களைப் பழி வாங்குவேன் என்று உறுதி பூண்டான் ஜயத்ரதன். 

கானக வாழ்க்கை முடியப் போகிறது. இங்கே இருந்தால் கௌரவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பாண்டவர்கள் நினைத்தார்கள்.

அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் பல நாட்கள் பயணம் செய்தார்கள். காடுகள் பலவற்றைக் கடந்தார்கள். களைப்பு அடைந்த அவர்களுக்குக் கடுமையான நா வறட்சி ஏற்பட்டது. 

நகுலனைப் பார்த்து தருமன், “எங்காவது சென்று தண்ணீர் கொண்டு வா” என்றான். நேரமானதே தவிர நகுலன் திரும்பவில்லை. அடுத்ததாகச் சகாதேவன் சென்றான். அடுத்தடுத்து அர்ச்சுனனும் பீமனும் சென்றார்கள்.