
அத்தியாயம் 16 அமைதிப் பேச்சு
பாண்டவர்களின் தூதரக தெளமிய – முனிவர் அத்தினாபுரம் வந்தார். திருதராட்டினனை வணங்கிய அவர், சூதாட்டத்தின் நிபந்தனைப்படி பாண்டவர்கள் நடந்து கொண்டார்கள். இந்திரப் பிரஸ்தத்தை அவர்களிடம் ஒப்படையுங்கள். மறுத்தால் அவர்கள் போர் செய்யவும் தயாராக உள்ளார்கள் என்றார்.
அரசர்போனபின்மால்பணிதவறுறாதம்முனிதனைநோக்கி
முரசகேதனனீயெழுந்தருள்கெனமுனிவனைத்தொழுதேத்தி
விரைசெய்தார்புனைவீடுமனெந்தைமெய்விதுரன்வேதியர்கோவை
பரசினோமடியென்றுபின்னுரியசொற்பணித்தருளெனப்போந்தான்.
வில்லிபாரதம் – உத்தியோக பருவம் – உலூகன் தூது சருக்கம் – 7
அங்கிருந்த துரியோதனன், “அஞ்ஞாத வாசம் முடிவதற்குள் பாண்டவர்கள் வெளிப்பட்டு விட்டார்கள். அதனால் அவர்கள் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும்” என்றான்.
குறுக்கிட்ட பீஷ்மர், “”பதின்மூன்று ஆண்டுகள் கழித்தேக் பாண்டவர்கள் வெளிப்பட்டார்கள். எதையும் அறியாமல் பேசாதே” என்று அவனை அடக்கினார்.
தூதரைப் பார்த்து திருதராட்டினன், “எங்கள் தூதராக சஞ்சயர் அங்கு வருவார், அமைதி குறித்து அவர் பேசுவார்” என்றான்.
திருதராட்டினனின் தூதராக சஞ்சயன் உபப்லாவ்யம் வந்தார். பாண்டவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசர்களையும் படைகளையும் பார்த்தார். கண்ணனும் அங்கே வந்தார்.
தருமனிடம் சஞ்சயன், “அமைதியே என்றும் நன்மை தரும். பொறுமைக்கு இலக்கணமானவர் நீர். ஆட்சியில் உரிமையை விட்டு விடும். உடன் பிறந்தவர்களுடன் அத்தினாபுரம் வந்து மகிழ்ச்சியாக வாழும்” என்று இனிமையாக பேசினார்.
பாரிலாசையுநின்னிராசபதத்திலாசையுமன்னுவெம்
போரிலாசையுநேயமங்கையர்போகமன்பொடு புதிதுணுஞ்
சீரிலாசையும்விட்டுநன்னெறிசேரவுன்னுதிநீயெனத்
தூரிலாசையறத்துறந்தருள்சுருதிமாமுனிசொல்லவே.
வில்லிபாரதம் – உத்தியோக பருவம் – உலூகன் தூது சருக்கம் – 10
குறுக்கிட்ட கண்ணன், “திருதராட்டினன் தன் மக்களை போல பாண்டவர்களை நினைக்கவில்லை. பாண்டவர்களுக்கு உரியதைத் தரத் தயாராக இல்லை. அப்படித்தானே” என்று கோபத்துடன் கேட்டார்.
இறுதியாகத் தருமன், “எங்களுக்கு உரிய நாட்டைத் தரச் சொல்லுங்கள், நாங்கள் ஐவர் இருக்கிறோம். ஐந்து ஊர்களையாவது எங்களுக்குத் தரச் சொல்லுங்கள். அமைதியாக இருக்கிறோம். இதையும் மீறிப் போர் நிகழ்ந்தால் அந்தப் பழி எங்களைச் சேராது” என்றான்.
அத்தினாபுரம் – திரும்பிய சஞ்சயன் தருமன் சொன்னதைச் சொன்னார். “பாண்டவர்களுக்கு உரிய நாட்டை அவர்களுக்குத் தந்து விடுவோம். போர் அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற இதுவே வழி” என்று பீஷ்மரும் துரோணரும் கருத்துத் தெரிவித்தனர்.
மூர்க்கனான துரியோதனனோ, “ஊசி முனையளவு நிலமும் பாண்டவர்களுக்குத் தரமாட்டேன். அவர்களைப் போர்க்களத்தில் சந்திப்பேன்” என்று உறுதியா சொன்னான்.
கங்கைமாமகனிவையிவை புகலவுங்கன்னனைக்கசிந்துட்கொண்
டங்கைகொட்டிநக்கிருந்தவந்தணனையுமவமதித்தெமதேபார்
தங்கள்கானகந்தமதெனப்புகன்றனன்சர்ப்பகேதனனந்தப்
பங்கயாசனமுனிவனுமீண்டுபோய்ப்பாண்டவர்க்கவைசொன்னான்.
வில்லிபாரதம் – உத்தியோக பருவம் – உலூகன் தூது சருக்கம் – 20
உபப்லாவ்யத்தில் கண்ணனை வணங்கிய தருமன் “என் உள்ளம் போரை விரும்பவில்லை. அமைதியையே நாடுகிறது. இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? வழி காட்டுங்கள்” என்று வேண்டினான்.
“தருமா! உங்கள் தூதனாக நானே அத்தினாபுரம் செல்கிறேன். போரைத் தவிர்க்க என்னாலான முயற்சி செய்கிறேன். ஆனால் துரியோதனன் அமைதிக்கு ஒப்புக் கொள்வான் என்று நினைக்கவில்லை. போருக்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்றார்.
அமைதித் தூதராக அத்தினாபுரம் வந்தார் கண்ணன். அவரைச் சிறப்பாக வரவேற்று உயரிய மரியாதைகள் தந்தான் திருதராட்டினன். ஆனால் கண்ணனோ அரண்மனையில் தங்காமல் விதுரரின் இல்லத்தில் தங்கினார். குந்தியைச் சந்தித்துப் பாண்டவர்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தார்.
மறுநாள் அவர் அரசவைக்கு வந்தார். போரினால் ஏற்படக் கூடிய கொடுமைகளை விரிவாகச் சொன்னார். “அமைதியாகச் செல்வதே இரு தரப்பினர்க்கும் நல்லது. மகன்களின் பேராசையைக் கண்டித்து, வையுங்கள். பாண்டவர்களுக்கு உரிய நாட்டை அவர்களிடம் தர வழி தேடுங்கள்” என்று திருதராட்டினரிடம் சொன்னார்.
உடனே துரியோதனன், “ஊசி முனையளவு நிலமும் பாண்டவர்களுக்குத் தரமாட்டேன். இது உறுதி” என்றான். கோபமாக அவையை விட்டு வெளியேறினான். “நாட்டு நன்மைதான் இன்றியமையாதது. அதற்காக நீங்கள் துரியோதனனைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார் கண்ணன்.
துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் நால்வரும் ஒன்று கூடினார்கள். “கண்ணனின் பேச்சைக்கேட்டு என்னைச் சிறை செய்யப் போகிறார்கள். அதற்கு முன் நாம் கண்ணனைச் சிறைப்படுத்த வேண்டும்” என்றான் துரியோதனன்.
இதை அறிந்த கண்ணன் கடுங்கோபம் கொண்டார். திருதராட்டினனைப் பார்த்து அவர், “உன் மகனுக்கு அறிவே இல்லையா? நான் யார் என்பது அவனுக்குத் தெரியாதா? என்னைச் சிறை செய்ய அவனால் முடியுமா? நான் தூதனாக வந்ததால் அவன் உயிர் பிழைத்தான்” என்றார்.
“என் பெருமையை எல்லோரும் பாருங்கள்” என்று விசுவரூபம் எடுத்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவர் உடலில் பிரம்மன் முதலான தேவர்கள் இருந்தார்கள். சூரிய சந்திரனும் முனிவர்களும் இருந்தனர். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் அங்கே காட்சி தந்தன.
திருதராட்டினனுக்கும் பார்வை உண்டாகுமாறு அருள் செய்தார் கண்ணன். அவனும் கண்ணனைப் பக்தியுடன் வணங்கினான். அங்கிருந்த எல்லோரும் கண்ணனின் பேருருவைக் கண்டு “கண்ணா ! கண்ணா !” என்று பக்திப் பரவசத்தில் மூழ்கினர். மீண்டும் பார்வை அற்றவன் ஆனான் திருதராட்டினன். தன் இயல்பான வடிவத்திற்கு வந்தார் கண்ணன். விதுரரின் இல்லத்திற்குத் திரும்பினார்.