அத்தியாயம் 18 கண்ணனின் கீதை

அத்தியாயம் 18 கண்ணனின் கீதை 

வியாச முனிவர் அத்தினாபுரம் வந்தார். திருதராட்டினனிடம் அவர், “சஞ்சயனுக்கு ஞானப் பார்வை வழங்குகிறேன். இங்கே இருந்தபடியே போர்க்களத்தில் நிகழ்வதை அவன் விளக்கமாகச் சொல்வான்” என்றார்.

மறுநாள் கதிரவன் எழுந்தான். இரு தரப்புப் படையினரும் அணிவகுத்து நின்றனர். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை படைகளே காட்சி தந்தன. இரண்டு பெரிய கடல்கள் எதிர் எதிரே நிற்பது போலத் தோன்றின.

வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட வெள்ளித் தேரில் அமர்ந்திருந்தார் பீஷ்மர். தன் வீரர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார். கையில் காண்டீபத்துடன் பெருமிதமாகத் தேரில் அமர்ந்தான் அர்ச்சுனன். அதில் கண்ணன் தேரோட்டியாக அமர்ந்திருந்தார்.

தன் தேரிலிருந்து இறங்கினான் தருமன். கௌரவர் படையை நோக்கி நடந்தான். தலைமை தாங்கிய பீஷ்மரைப் பணிவாக வணங்கினான். “போர் தொடங்க உங்கள் அனுமதி வேண்டும்” என்று வேண்டினான்.

 

உள்ளம் நெகிழ்ந்த பீஷ்மர், “தருமா! நேர்மை உன் பக்கம் உள்ளது. உன்னை வெல்ல யாராலும் முடியாது” என்று வாழ்த்தினார். தன் ஆசிரியர்களான துரோணரையும் கிருபாச்சாரியாரையும் வணங்கினான் தருமன். பிறகு தன் படை வீரர்களிடம் திரும்பினான்.

“கண்ணா ! நம் தேரை இரு படைகளுக்கும் நடுவே நிறுத்துங்கள். நம்மை எதிர்த்து உயிரை – விட வந்திருப்பவர்கள் யார் யார் என்று பார்க்கிறேன்” என்று பெருமிதத்துடன் சொன்னான் அர்ச்சுனன்.

கண்ணனும் இரு படைகளுக்கு நடுவே தேரை நிறுத்தினான். பீஷ்மர், துரோணர் என்று ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்தான் அர்ச்சுனன்.

ஆ! இங்கே என் பாட்டனார் உள்ளார். என் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் உள்ளனர். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் உள்ளனர். இவர்களையா நான் கொல்ல வேண்டும்? என்று உள்ளம் கலங்கினான்.

நின்றமர்தொடங்கநினைகிற்பவர்பிதாமகனுநீள்கிளைஞருந்துணை வருங்

கொன்றிவரைவாகுவலியிற்கவர்வதித்தரணிகொள்பவனு மென்றுணைவனே

யென்றுபலபேசியதிபாதகமெனக்கருதியான்மலைவுறே னினியெனா

அன்றுவசுதேவன்மகனோடுரைசெய்தானமரிலவனுமிவ னோடுரைசெய்வான்.

  • வில்லிபாரதம் – உத்தியோக பருவம் – அணிவகுப்புச்சருக்கம் – 34

“கண்ணா ! எனக்கு வேண்டியவர்கள் அனைவரும் எதிரே நிற்கிறார்கள். இவர்களைக் கொன்று கிடைக்கும் ஆட்சியும் செல்வமும் எனக்கு வேண்டாம். போர் செய்யவே என் உள்ளம் பதறுகிறது. நான் இவர்கள் மீது அம்பு தொடுக்க மாட்டேன்” என்று கண்ணீர் மல்கச் சொன்னான்.

அவன் கையிலிருந்த காண்டீபம் நழுவியது. அப்படியே தேரில் சாய்ந்தான். “அர்ச்சுனா! மாவீரனான நீ கோழையைப் போலப் பேசலாமா? போர்க்களத்தில் ஒப்பாரி வைப்பது வீரனுக்கு அழகா? இதனால் பெருமை அழிந்து பழி பாவமே சேரும். 

நீ கொல்லா விட்டாலும் இவர்கள் சாகத்தான் போகிறார்கள். உடலுக்குத்தான் அழிவே தவிர உயிரை யாராலும் அழிக்க முடியாது. அதனால் கொல்பவனோ கொல்லப்படுபவனோ யாரும் கிடையாது.

நாம் புதிய புதிய ஆடை அணிகிறோம். அதுபோல இந்த உயிரும் வெவ்வேறு உடலை அடையும். பிறப்பும் இறப்பும் உயிருக்குக் கிடையாது.

 

கடமையைச் செய்வதே உன் போன்ற வீரனுக்கு அழகு. உள்ளச் சோர்வுக்கு இடம் தராதே” என்று அறிவுரை சொன்னார் கண்ணன். தன் தெய்வீக வடிவத்தையும் அவனுக்குக் காட்டினார்.

கண்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய உபதேசங்களின் முக்கிய பகுதி.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடந்து கொண்டு இருக்கிறதோ அது

நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே

நடக்கும்.

நீ எதைக் கொண்டு வந்தாய் இழப்பதற்கு

நீ எதை படைத்து இருந்தாய் அழிப்பதற்கு, நீ எதை பெற்றாயோ அது இங்கிருந்தே பெறப்பட்டது.

இன்று உன்னுடையது எதுவோ அது நாளை வேறு

ஒருவனுடையது. 

அர்ச்சுனா! உலகத்தில் நடந்துவிட்ட செயல்களும், இப்போது நடந்து கொண்டு இருக்கிற செயல்களும், இதற்கு பிறகு நடக்க போகிற செயல்களும் என்னுடைய செயல்கள். இந்த என்னுடைய செயல்கள் அனைத்தையும் நான் நன்றாகவே செய்து வருகிறேன்.

 

நீ உன்னுடைய கடமையை ஒழுங்காகவும், நியாயமாகவும், மன உறுதியோடும் செய். அவ்வாறு உன்னுடைய கடமையை செய்வது மட்டும்தான் உன்னுடைய வேலை. அதனால் உண்டாகும் பலனைப் பற்றி நீ கவலைப்படாதே.

அர்ச்சுனா! நீயோ அல்லது வேறு எந்த மனிதனோ தான் பிறக்கும் போது எதையும் கொண்டு வருவதில்லை. மனிதன் இந்த உலகத்திற்கு வரும் போது வெறும் உடலை மட்டும் தான் கொண்டு வருகிறான்.

மனிதனின் செல்வம், புகழ், உறவினர்கள், நண்பர்கள் முதலிய அனைத்தும் என்னால் படைக்கப்பட்டது. அப்படி இருக்கும் போது உன்னுடையது என்று நீ எதை அழிக்கப் போகிறாய்.

அர்ச்சுனா! நீ எதை பெற்றுக் கொண்டாயோ அது எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இந்த உலகத்தில் எதுவும் உன்னுடையது அல்ல. எல்லாம் என்னால் உருவாக்கப்பட்டது.

அர்ச்சுனா! இங்கே எவையெல்லாம் உன்னுடையது என்று நினைக்கிறாயோ அவையெல்லாம் நாளைக்கு வேறு ஒருவனுடையது. ஆகவே நான் எனது என்ற அகந்தையை அழித்துவிடு என்று அறிவுரை கூறினான் கண்ணன்.

ஆங்கவன் றெளிந்து தேறி யறம்பொருளின்ப முற்றிப்

பாங்கினானின்னையெய்தும்பயனெனக்குரைத்தாயென்று

பூங்கடிக்கமலநாறும்பொன்னடிபோற்றியான்செய் தீங்கெலாம்

பொறுத்தியென்றுசெருச்செயுமாறுபூண்டான்.

  • வில்லிபாரதம் – வீட்டுமபருவம் – முதற் போர்ச்சருக்கம் – 8

“கண்ணா ! என் கலக்கம் நீங்கியது. தெளிவு பெற்றேன். வீரத்துடன் நான் போர் செய்வேன்” என்றான் அர்ச்சுனன். அர்ச்சுனனுக்குக் கண்ணன் சொன்ன அறிவுரைகளே பகவத் கீதை என்று வழங்கப்படுகிறது.

போர் தொடங்கியது. பாண்டவர் படைத் தலைவன் திஷ்டத்தும்மனின் சங்கு ஒலித்தது. பீஷ்மரின் சங்கும் பேரோசை எழுப்பியது.

இரண்டு படைகளும் ஆரவாரத்துடன் போர் செய்யத் தொடங்கின. அப்பொழுது எழுந்த புழுதி கதிரவனையே மறைத்தது. எங்கும் அம்பு மழையாகக் காட்சி அளித்தது. வீரர்களின் அலறல் கேட்டபடி இருந்தது. 

பீஷ்மர் எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். அவர் சென்ற இடமெல்லாம் பாண்டவர் படைக்குப் பேரழிவு ஏற்பட்டது. 

முதல் நாள் போர் கௌரவர்களுக்கு வெற்றியாக முடிந்தது. பாண்டவர்கள் தரப்பில் விராட இளவரசர்களான உத்தரனும் சுவேதனும் இறந்தார்கள்.