19.பீஷ்மரின் போர் |THE MAHABHARATHAM - Bhishma's War

அத்தியாயம் 19 பீஷ்மரின் போர் 

இரண்டாம் நாள் போர் தொடங்கியது. சீற்றத்துடன் தேரில் அமர்ந்தான் அர்ச்சுனன். அவன் தேர் சென்ற இடமெல்லாம் எதிரிகள் வீழ்ந்த வண்ணம் இருந்தனர். யாராலும் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அன்றைய போர் பாண்டவர்களுக்குப் பெரிய வெற்றியாக முடிந்தது.

அன்றிரவு பீஷ்மரிடம் வந்த துரியோதனன், “நீங்கள் போர்க்களத்தில் இருக்கும் போதே கௌரவர்க்கு இவ்வளவு இழப்பா? பாண்டவர்களோடு நீங்கள் உண்மையாகப் போரிடவில்லை” என்று குறை சொன்னான்.கோபம் கொண்ட பீஷ்மர் “நாளை என் வீரத்தைப் பார். கண்ணனையே படைக்கலம் எடுக்க வைக்கிறேன்” என்றார்.

மூன்றாம் நாள் போர் தொடங்கியது. போர் வெறி கொண்ட காலனைப் போல பீஷ்மர் காட்சி தந்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகளின் பிணங்கள் குவிந்தன. பாண்டவர் படை தோற்று ஓடத் தொடங்கியது.

 

அர்ச்சுனன் வீரத்துடன் போரிடவில்லை. அதனால்தான் பாண்டவர் படை ஓடுகிறது என்று கோபம் கொண்டார் கண்ணன். தேரிலிருந்து இறங்கிய அவர் கையில் சக்கரத்தை ஏந்தினார். பீஷ்மரை நோக்கிச் சென்றார். 

வாசவன்முற்பெறு காளைதொழத்தொழ மாறுபடச்சினவுங் 

கேசவனிப்படி மேல்வருகிற்பது கேவலமுற்றுணரா 

நாசநமக்குறு காலநணித்தென நாடிநடுக்கமுடன் 

தேசணிபொற்றட மேருவெனத்திரி தேரினைவிட்டிழியா.

  • வில்லிபாரதம் – வீட்டுமபருவம் – மூன்றாம் போர்ச்சருக்கம் – 16

அவரைப் பணிவாக வணங்கிய பீஷ்மர், “கண்ணா ! உங்களால் கொல்லப்பட்டால் பெரும் புகழ் பெறுவேன்” என்றார். கோபம் தணிந்த கண்ணன் மீண்டும் தேரில் ஏறினார். புத்துணர்ச்சி பெற்ற அர்ச்சுனன் வீரத்துடன் போர் செய்தான். அவன் அம்பு மழையால் கௌரவர் படை நிலை குலைந்தது.

நான்காம் நாள் போரில் அர்ச்சுனனின் மகன் அபிமன்யு வீரத்துடன் போர் செய்தான். அவனை எதிர்க்க முடியாமல் அசுவத்தாமனும் சல்லியனும் பின்வாங்கினார்கள். துரியோதனன் தம்பியர் சிலரைப் பீமன் கொன்றான்.

 

ஐந்தாம் நாளும் ஆறாம் நாளும் போர் நடந்தது இரு தரப்பினரும் நிறைய வீரர்கள் மாண்டனர்.

ஏழாம் நாளும் எட்டாம் நாளும் கௌரவர்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரை எதிர்த்தான் தருமன். சிகண்டியுடன் போர் செய்ய பீஷ்மர் தயங்கினார். தன் தேரை வேறு பக்கம் திருப்பினார்.

துரியோதனின் தம்பியரில் மேலும் சிலரைப் பீமன் கொன்றான். கடோத்கஜனும் கௌரவர் படைக்குப் பேரழிவை ஏற்படுத்தினான்.

நின்றார்நின்றபடிகடிதாகநெடிதோடிச் 

சென்றார்கண்டசிந்துரம்யாவுந்தீயம்பிற் 

கொன்றார்மற்றக்கொற்றவர்யாருங்கொலையுண்டார் 

வென்றாரன்றோவீமன்மகன்சேனையில் வீரர்.

  • வில்லிபாரதம் – வீட்டுமபருவம் – நான்காம் போர்ச்சருக்கம் – 36

கௌரவர் படைக்கு ஏற்பட்ட தோல்வியைக் கண்டு வருந்தினான் துரியோதனன். அன்றிரவு பீஷ்மரைச் சந்தித்தான் அவன்.

 

“மூவுலகங்களிலும் உங்களுக்கு இணையான மாவீரர் இல்லை. இத்தனை நாள் போர் புரிந்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பாண்டவர்களிடம் உள்ள அன்பே அதற்குக் காரணம் . போர் செய்ய விருப்பம் இல்லாவிட்டால் கர்ணனைப் படைத் தலைவனாக்க அனுமதி கொடுங்கள்” என்று எரிச்சலுடன் சொன்னான்.

கோபம் கொண்ட பீஷ்மர், “துரியோதனா! எந்தப் பக்கம் கண்ணன் இருக்கிறாரோ அந்தப் பக்கமே வெற்றி பெறும். என்னால் இயன்ற கடமையைச் செய்வேன். போர்க்களத்தில் வீரம் காட்டி இறப்பேனே ஒழிய வெறுமனே திரும்பமாட்டேன்” என்றார்.

ஒன்பதாவது நாள் போர் தொடங்கியது. மிகுந்த வீரத்துடன் பீஷ்மர் போர் செய்யத் தொடங்கினார். பாண்டவர் படைப் பிரிவுகளை ஒவ்வொன்றாக அழித்தார். எதிர்த்த திஷ்டத்தும்மன், துருபதன், விராடனைத் தோற்று ஓடும்படி செய்தார்.

 

அன்றிரவு பாசறைக்குத் திரும்பிய தருமன் சோகத்துடன் இருந்தான். “கண்ணா ! பீஷ்மரால் நம் படை பெருமளவு அழிந்துவிட்டது. அவர் உயிருடன் இருக்கும் வரை நமக்கு வெற்றி கிடைக்காது” என்று கலங்கினான்.

“தருமா! கலங்காதே! நாம் அனைவரும் பீஷ்மரின் பாசறைக்குச் செல்வோம். அவரை எப்படிக் கொல்வது என்று அவரிடமே வழி கேட்போம்” என்றார் கண்ணன்.

அதன்படியே நள்ளிரவில் பாண்டவர்களும் கண்ணனும் பீஷ்மரின் பாசறையை அடைந்தனர். அவரை வணங்கினார்கள். தாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் தெரிவித்தனர்.

“தருமா! நான் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் வெற்றி பெற இயலாது. நான் பெண்களுடன் போர் செய்ய மாட்டேன். சிகண்டி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவள்.

 

அவளை என் முன் நிறுத்திப் போர் செய்யுங்கள். அப்பொழுது தான் படைக் கருவிகளைப் பயன்படுத்த மாட்டேன். அர்ச்சுனன் அம்பு வீசி என்னைக் கொல்லட்டும்” என்றார் அவர். 

பத்தாம் நாள் போர் தொடங்கியது. நாள்தோறும் பத்தாயிரம் வீரர்களை கொன்ற பீஷ்மர் களைத்து இருந்தார். சாவை எதிர்பார்த்தவர் போல ஆரவாரமின்றிப் போர் செய்து கொண்டிருந்தார்.

அவர் முன் சிகண்டியை நிறுத்தினான் அர்ச்சுனன். போர் செய்யத் தயங்கி நின்றார் பீஷ்மர். அர்ச்சுனன் அவர் மீது அம்புகளைக் குறி வைத்து எய்தான், எல்லா அம்புகளையும் ஏற்றுக் கொண்டார் அவர். அப்படியே விழுந்தார்.

போனதிண்சிகண்டிதனைமீளவுங்கொணர்ந்து பொருபூசலுங்கடந்திரதமே னீநிலஞ்சனின்கணையுமேவுகென்றுவெஞ்சமரினேர்நடந்து சென்றுவிசயன் கூனலங்கிதந்தசிலைகோலியம்பொடம்புபலகூடநெஞ்சழன்றுதையினான் வேனிலம்புமுன்புதுதையாதிலங்குமம்பொன்வரைமேனியெங்கணும் புதையவே.

  • வில்லிபாரதம் – வீட்டுமபருவம் – பத்தாம்போர்ச்சருக்கம் – 34

பீஷ்மர் விழுந்தார் என்ற செய்தி எங்கும் பரவியது. இரு தரப்பினரும் போர் செய்வதை நிறுத்தினார்கள். அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மரை எல்லோரும் வணங்கினார்கள். “இப்பொழுது தட்சிணாயம் நடக்கிறது. நல்ல காலமான உத்தராயனம் வரும் வரை நான் உயிரு இருப்பேன்” என்றார் அவர்.

நள்ளிரவில் கர்ணன் அங்கு வந்து அவரை வணங்கினான். “கர்ணா! நீ குந்தியின் மைந்தன். வீரத்தில் அர்ச்சுனனுக்கு இணையானவன். நான் என்ற ஆணவம் உன்னிடம் மிகுதியாக இருந்தது. அதனால்தான் உன்னிடம் கொடுமையாக நடந்து கொண்டேன்” என்றார் அவர்.

“உங்கள் உள்ளத்தைப் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்” என்றான் கர்ணன்.