அத்தியாயம் 21 தருமன் சொன்ன பொய்

அத்தியாயம் 21 தருமன் சொன்ன பொய்

சூழ்ச்சியால் ஜயத்ரதன் கொல்லப்பட்டதை அறிந்து துடித்தான் துரியோதனன். “இவர்கள் பகலை இரவாக மாற்றினார்கள். நான் இரவைப் பகலாக மாற்றுகிறேன். இன்றிரவும் போர் நடக்கட்டும்” என்றான்.

அதன்படியே இரவில் இரண்டு படைகளும் போர் செய்யத் தொடங்கின. வீரத்துடன் போர் செய்த துரோணர் துருபதனையும் விராடனையும் கொன்றார்.

துரியோதனனின் தம்பியர் சிலரைப் பீமன் கொன்றான். பீமனின் மகனான கடோத்கஜன் இரவில் மிகுந்த வலிமை பெற்றான். கௌரவர் படையைக் கலக்கி எண்ணற்ற வீரர்களைக் கொன்றான்.

சக்தி ஆயுதத்தைக் கடோத்கஜனின் மேல் எறிந்தான் கர்ணன். அது கடோத்கஜனைக் கொன்று விட்டு இந்திரனிடம் சேர்ந்தது. கர்ணன் சக்தி ஆயுதத்தை இழந்துவிட்டான். அர்ச்சுனனுக்கு ஆபத்து நீங்கியது. என்று பாண்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

பதினைந்தாம் நாள் போர் தொடங்கியது. போர் வெறி கொண்டவராக இருந்தார் துரோணர். அவர் சென்ற இடமெல்லாம் பாண்டவர் படை அழிந்தது. எதிர்த்த படைத் தலைவர்கள் தோற்றுப் பின் வாங்கினார்கள்.

 

இதைப் பார்த்த கண்ணன் தருமனிடம் வந்தார். “தருமா! நேர்மையான வழியில் துரோணரைக் கொல்ல முடியாது. அவருடைய மகன் அசுவத்தாமன் இறந்தான் என்று நீ சொல்ல வேண்டும். அதை நம்பும் அவர் பிள்ளைப் பாசத்தால் உள்ளம் கலங்குவார். போர்க் கருவிகளை கீழே போடுவார். அப்பொழுது அவரைக் கொன்று விடலாம்” என்றார். தருமனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்றான் பீமன். துரோணரிடம் அவன், “அசுவத்தாமன் கொல்லப்பட்டான்” என்று கத்தினான். 

அவன் பேச்சை நம்பாத துரோணர் “தருமா! அசுவத்தாமன் கொல்லப்பட்டது உண்மையா?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

“இறந்தது அசுவத்தாமன்” என்று உரத்த குரலில் சொன்னான் தருமன். மெல்லிய குரலில் “என்ற யானை” என்றான்.

இதைக் கேட்ட துரோணர் தன் ஒரே மகன் இறந்து விட்டான். போர் செய்து என்ன பயன் என்று கலங்கினார். அவர் கையிலிருந்த வில்லும் வாளும் நழுவிக் கீழே விழுந்தன. அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார்.

அவர் தேரில் பாய்ந்தான்  திஷ்டத்தும்மன். தன் வாளால் அவரின் தலையை வெட்டி வீழ்த்தினான். 

படைத் தலைவரை இழந்த கௌரவர் படை கலங்கியது. பாண்டவர் படை ஆரவாரம் செய்தது. தன் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டதை அறிந்தான் அசுவத்தாமன். கோபத்தால் துடித்த அவன், “பாண்டவர்களைக் கொடுமையாகப் பழி வாங்குவேன்” என்று சபதம் செய்தான்.