
Chapter 9 – இராசசூய வேள்வி
மகிழ்ச்சி அடைந்தார் நெருப்புக் கடவுள். அர்ச்சுனனுக்குக் காண்டீபம் என்ற வில்லைப் பரிசாக அளித்தார். “இந்த வில்லிலிருந்து அம்புகள் மழை போலப் பொழியும். இது உனக்குப் பல வெற்றிகளைத் தரும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.
எரிந்த காண்டவக் காட்டிலிருந்து அசுவேசன் பாம்பு என்ற தப்பியது. ஆனால் அதன் தாய் தீயில் சிக்கி இறந்தது. பழி வாங்க நினைத்த அந்தப் பாம்பு கர்ணனிடம் வந்தது.
“உங்கள் பகைவன் அர்ச்சுனனே எனக்கும் பகைவன் நான் நாகாஸ்திரமாக உங்களிடம் இருக்கிறேன், போரில் அர்ச்சுனனைக் கொல்கிறேன்” என்றது.
அதை, ஏற்றுக் கொண்டான் கர்ணன். அந்தக் காட்டுத் தீயில் சிக்கிய மாயாசுரனைக் காப்பாற்றினான் அர்ச்சுனன். அந்த மாயாசுரன் இந்திரப் பிரஸ்தத்தில் அழகான மாளிகை ஒன்று கட்டினான். அந்த மாளிகை மாயத்தன்மையுடன் விளங்கியது.
அதன் – சுவர்களும் , தூண்களும் – பொன்னாலாகி இருந்தன. அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. ஆங்காங்கே பொய்கைகளும் பூஞ்சோலைகளும் – நீர்வீழ்ச்சிகளும் இருந்தன. தரை பளிங்குக் கற்களால் இழைக்கப்பட்டு இருந்தது.
தரை இருக்கும் இடம் நீர்நிலை போல இருந்தது. நீர்நிலை இருக்கும் இடம் தரை போல இருந்தது. இந்திரப் பிரஸ்த அரண்மனைக்கு நாரத முனிவர் வந்தார். “தருமா! நீதிநெறியுடன் ஆட்சி செய்கிறாய். உன் புகழ் உலகெங்கும் பரவி உள்ளது. புகழ் நிலைத்து நிற்க இராசசூய வேள்வி செய்” என்றார்.
இராசசூய வேள்வி செய்வது குறித்துக் கண்ணனிடம் கருத்துக் கேட்டான் தருமன். “தருமா! அந்த வேள்வி செய்ய தடையாக இருப்பவன் ஜராசந்தன் தான். வலிமை வாய்ந்த அவனை என்னால் எதிர்க்க முடியவில்லை. அவனுக்கு அஞ்சி மதுரையிலிருந்து துவாரகைக்குச் சென்று விட்டேன்” என்றார் கண்ணன்.
குறுக்கிட்ட பீமன், “நமக்குக் கண்ணன் துணை இருக்கிறார். வலிமை மிகுந்த நான் இருக்கிறேன். அர்ச்சுனன் இருக்கிறான். நம்மால் முடியாதது. உண்டோ ” என்றான், அதை ஏற்றுக் கொண்ட கண்ணன், “தருமா! நானும் பீமனும் அர்ச்சுனனும் மகத நாடு செல்கிறோம். ஜராசந்தனை கொல்ல முயற்சி செய்கிறோம்” என்றார்.
அதன்படியே அவர்கள் மூவரும் அந்தணர் வேடத்தில் மகதம் வந்தனர். ஜராசந்தன் அவர்களை வரவேற்றான். மூவரும் மாறுவேடத்தைக் கலைத்தனர்.
“ஜராசந்தா ! எங்களில் யாருடன் போர் செய்ய விரும்புகிறாய்?” என்று கேட்டார் கண்ணன்.
“நான் பீமனுடன் போர் செய்கிறேன்” என்றான் ஜராசந்தன். அவர்கள் இருவரும் கடுமையாக மற்போர் செய்யத் தொடங்கினார்கள். பதின்மூன்று நாட்கள் தொடர்ந்து போர் நடந்தது.
பதினான்காம் நாள் ஜராசந்தன் தளர்ச்சி அடைந்தான். அவன் உடலை இரு பாதியாகக் கிழித்து எறிந்தான் பீமன். என்ன வியப்பு. ஜராசந்தனின் இரு உடல்களும் ஒன்றாக இணைந்தன. மீண்டும் அவன் உயிர் பெற்றான். பீமனுடன் போர் செய்யத் தொடங்கினான்.
திகைத்து நின்ற பீமனைப் பார்த்தார். கண்ணன். அருகில் வளர்ந்திருந்த புல்லை எடுத்தார். அதை இரண்டாகக் கிழித்தார். தலைப் பகுதியையும் கால் பகுதியையும் மாற்றி வைத்து எறிந்தார்.
குறிப்பு உணர்ந்த பீமன், மீண்டும் ஜராசந்தனின் உடலை இரண்டாகக் கிழித்தான். தலைப் பகுதியையும் கால் பகுதியையும் மாற்றிப் போட்டான். ஜராசந்தன் இறந்து போனான்.
வெற்றிச் செய்தியுடன் மூவரும் இந்திரப் பிரஸ்தம் வந்தார்கள், இராசசூய வேள்விக்கான நாள் குறிக்கப்பட்டது. பல நாட்டு அரசர்களுக்கும் ஓலை அனுப்பினார்கள். அவர்கள் காணிக்கைப் பொருள்களுடன் அங்கு வந்தனர்.
நல்ல நாளில் இராசசூய வேள்வி தொடங்கி இனிதே முடிந்தது. அங்கிருந்த அரசர்கள் அனைவரும் “யாராலும் செய்ய இயலாத வேள்வியைச் செய்து விட்டீர்கள் என்றும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்” என்று தருமனைப் புகழ்ந்தார்கள்.
பாண்டவர்களுக்குக் கிடைத்த சிறப்பைக் கண்டு துரியோதனன் உள்ளம் புழுங்கினான்.