
Chapter – 7 பாஞ்சாலியின் சுயம்வரம்
(Click here for the entire Mahabharatham Series Blog)
Click here for YouTube Playlist
பாஞ்சால நாட்டு இளவரசி பாஞ்சாலிக்குச் சுயம்வரம் நிகழ உள்ளது. இந்தச் செய்தியைப் பாண்டவர்கள் கேள்விப்பட்டார்கள். அதில் கலந்து கொள்ள பாஞ்சால நாட்டை அடைந்தனர். அங்கே தங்கள் தாயுடன் ஒரு குயவனின் வீட்டில் தங்கினார்கள்.
சுயம்வர மண்டபத்தில் பல நாட்டு அரசர்களும் அமர்ந்து இருந்தார்கள். அந்தணர்கள் வேடத்தில் பாண்டவர்களும் அங்கே இருந்தார்கள்.
பேரழகுப் பதுமையெனப் பாஞ்சாலி அங்கே எல்லோரும் வீற்றிருந்தாள். இவளை மணக்கும் பேறு யாருக்கு உள்ளதோ? தெரியவில்லையே? என்று எல்லோரும் நினைத்தார்கள்.
பாஞ்சாலியின் தமையனான திஷ்டத்தும்மன் எழுந்தான். “சுயம்வரத்துக்கு வந்திருக்கும் எல்லோரும் கவனியுங்கள். மண்டபத்தின் நடுவில் கம்பம் ஒன் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் உச்சியில் தங்க மீன் உள்ளது அந்த மீன் விசிறியோடு பொருத்தப்பட்டு சுற்றிக் கொண்டே இருக்கும்.
கம்பத்தின் அடியில் நீர்நிலை உள்ளது. அதில் மேலே சுற்றும் மீனின் நிழல் தெளிவாகத் தெரியும். நீர்நிலையை பார்த்து மீனுக்குக் குறி வைத்து அம்பு எய்ய வேண்டும். மீனை வீழ்த்துபவர்க்குப் பாஞ்சாலி மாலை இடுவாள்” என்றான்.
அரசர்கள் ஒவ்வொருவராகப் போட்டியில் கலந்து கொண்டனர். யாராலும் வெற்றி பெற முடியவில்லை . கர்ணன், துரியோதனன், ஜராசந்தன் போன்ற மாவீரர்களும் தோற்றனர்.
அந்தணர்கள் வரிசையிலிருந்து அர்ச்சுனன் எழுந்தான். வில்லில் அம்பு பூட்டினான். நீர்நிலையில் தெரிந்த நிழலையே கவனித்து மேலே குறி வைத்தான். வில்லை இழுத்து அம்பைவிட்டான். அந்த அம்பு தங்க மீனில் குத்தி அதை வீழ்த்தியது.
அவனின் அழகில் மயங்கிய பாஞ்சாலி அவனுக்கு மாலை இட்டாள். இதனால் அரசர்கள் பலரும் பொறாமை கொண்டனர். அர்ச்சுனனோடு போர் செய்யத் தொடங்கினார்கள்.
அங்கிருந்த கண்ணன், “வென்றவனோடு அரசர்கள் போர் புரிவது தகாது” என்று அவர்களை அமைதிப் படுத்தினார். பாஞ்சாலியை அழைத்துக் கொண்டு தன் இல்லம் வந்தான் அர்ச்சுனன். அப்பொழுது குந்தி வீட்டிற்குள் இருந்தாள்.
வாயிலில் நின்ற அவன், “அம்மா! அபூர்வமான பரிசு கொண்டு வந்துள்ளேன்” என்றான்.
“அர்ச்சுனா! அந்தப் பரிசை ஐவரும் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றபடியே வெளியே வந்தாள் குந்தி. பரிசாகக் கிடைத்தது பெண் என்பதை அறிந்து திகைத்தாள்.
மற்ற மகன்களும் அங்கு வந்தனர். தாய் இப்படிப் பேசி விட்டாரே என்று குழப்பம் அடைந்தார்கள்.
தொடர்ந்து வந்த திஷ்டத்தும்மன் அவர்கள் பாண்டவர்கள் என்பதை அறிந்தான். தந்தையிடம் வந்த அவன், “பாஞ்சாலியை மணந்தவன் அர்ச்சுனனே” என்று சொன்னான்.
தன் எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தான் துருபதன். பாண்டவர்களை உரிய மரியாதையுடம் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான். தன் தாயார் சொன்னதைச் சொன்னான் அர்ச்சுனன்.
“பாஞ்சாலி ஐவரை மணப்பதா? நான் ஒப்புக் கொள் மாட்டேன்” என்றான் துருபதன். வியாச முனிவர் அங்கே வந்தார். “துருபதனே! சென்ற பிறவியில் உன் மகள் தவம் செய்தாள். அவள் முன் சிவபெருமான் தோன்றினார்.
கணவன் வேண்டும் என்று ஐந்து முறை வேண்டினாள் அவள். அடுத்த பிறவியில் ஐந்து கணவன்களைப் பெறுவாய் என்றார் சிவன். தேவர்களே பாண்டவர்களாகப் பிறந்து உள்ளார்கள். பாஞ்சாலி ஐவரை மணப்பதில் தவறு இல்லை ” என்றார்.
பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். பாஞ்சாலியைத் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை அறிந்தான் துரியோதனன்.
நம் சூழ்ச்சி வெளிப்பட்டு விட்டதே பாண்டவர்களுக்குத் துருபதனின் துணையும் – கிடைத்து விட்டதே என்று கலக்கம் கொண்டான்.
திருதராட்டினனிடம் பீஷ்மர், “உன் மக்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்து விட்டனர். இனிமேல் அவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது. பாண்டவர்களுக்குப் பாதி அரசைத் தருவே நல்ல என்றார்.
“பாண்டவர்களும் என் மக்கள்தாம். பாஞ்சால நாடு சென்று விதுரர் அவர்களை அழைத்து வரட்டும். பிறகு செய்ய வேண்டியதைச் செய்வோம்” என்றான் திருதராட்டினன்.
அதன்படியே விதுரரும் பாண்டவர்களை அழைத்துக் கொண்டு அத்தினாபுரம் திரும்பினார்.
தருமனிடம் திருதராட்டினன், “இந்த நாட்டில் உங்களுக்கும் பாதி உரிமை உள்ளது. காண்டவப் பிரஸ்தப் பகுதியை உங்களுக்கு அளிக்கிறேன். அங்கே தலைநகரம் அமைத்து நீதிநெறியுடன் ஆளுங்கள். என் பகுதியை நான் இங்கே ஆட்சி செய்கிறேன்” என்றான்.