
அரக்கு மாளிகை
பாண்டவர்கள் தங்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்ப வந்தார் விதுரர். சூழ்ச்சியை அறிந்திருந்த அவர் தருமனிடம், “நெருப்பை உண்டாக்கும் பொருள்களிடம் கவனமாக இரு. வளைக்குள் பதுங்கும் எலி பாதுகாப்பாக இருக்கும்” என்று எச்சரிக்கை செய்தார்.
பாண்டவர்களும் குந்தியும் வாரணாவதம் வந்தார்கள். அங்கிருந்த மக்கள் அவர்களைச் சிறப்பாக வரவேற்றார்கள். பாண்டவர்களைப் பணிவாக வணங்கினான் புலோச்சனன். “நீங்கள் தங்குவதற்காக அழகான மாளிகை கட்டப்பட்டு உள்ளது. வாருங்கள்” என்று அழைத்தான்.
எந்த ஐயமும் இன்றி அவர்கள் அந்த மாளிகையில் தங்கினார்கள். கலை நுணுக்கங்களோடு அமைந்திருந்த அந்த மாளிகை அவர்களைக் கவர்ந்தது.
“விதுரர் ஏன் எளிதில் தீப்பற்றும் பொருள்களைப் பற்றிக் குறிப்பிட்டார். எச்சரிக்கையாக இருக்கச் சொன்னாரே” என்று சிந்தித்தபடியே அந்த மாளிகையைச் சுற்றி வந்தான் தருமன்.
அரக்கின் மணம் அவன் மூக்கை எட்டியது. சுவர்களைக் கூர்ந்து கவனித்தான். மாளிகையே அரக்கினால் கட்டப்பட்டதுதான் என்பதை அறிந்தான். எதிரிகளின் சூழ்ச்சியை உணர்ந்தான். தம்பியாரை அழைத்த அவன், “நம்மைக் கொல்ல சூழ்ச்சி நடக்கிறது. இது நம் தாய்க்குத் தெரிய வேண்டாம்” என்றான்.
வேட்டுவப் பெண் ஒருத்தி தன் ஐந்து பெண்களுடன் குந்தியிடம் வந்தாள். அவர்களுக்கு உணவு அளித்த குந்தி ஓர் அறையில் தங்க வைத்தாள் அவர்களை.
அப்பொழுது பணியாள் ஒருவன் அங்க தருமனை வணங்கினான். “விதுரர் என்னை இங்கே அனுப்பி வைத்தார். நீங்கள் தப்பிச் செல்ல சுரங்கப் பாதை அமைத்து உள்ளேன்” என்றான்.
தம்பியாரைப் பார்த்து தருமன், “எதிரிகளை நாம் முந்திக் கொள்ள வேண்டும். இந்த அரக்கு மாளிகைக்க நாமே தீ வைப்போம். சுரங்கப் பாதை வழியாகச் செல்வோம் நாம் உயிர் பிழைத்தது யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றான்.
அந்த மாளிகைக்கு பீமன் தீ வைத்தான். அரக்கு மாளிகையாதலால் தீ எங்கும் பரவியது. புலோச்சனும் வேட்டுவப் பெண்ணும் மகன்களும் தீயில் சிக்கி மாண்டனர். தீயை அணைத்த மக்கள் கருகிக் கிடந்த உடல்களைப் பார்த்தனர். குந்தி தேவியும் பாண்டவர்களும் இறந்து விட்டனர் என்றே நினைத்தனர்.
இந்த அவலச் செய்தி அத்தினாபுரத்தை எட்டியது. நாட்டு மக்கள் எல்லோரும் அழுது புலம்பினார்கள். தங்கள் எண்ணம் நிறைவேறியது என்று கௌரவர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தார்கள். வருத்தபடுவது போல வெளியே நடித்தார்கள். கார், போர் பாண்டவர்கள் இறந்ததை அறிந்த பீஷ்மர் உணவு உண்ணவில்லை. அவரிடம் மட்டும் நடந்த உண்மையைச் சொன்னார் விதுரர். அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த பாண்டவர்கள் கங்கை ஆற்றைக் கடந்தார்கள். காட்டிற்குள் வெகு தொலைவு நடந்தார்கள்.
தாயும் உடன் பிறந்தவர்களும் களைப்பு அடைந்ததைப் பீமன் கவனித்தான். வலிமை மிகுந்த அவன் அவர்கள் ஐவரையும் தூக்கிக் கொண்டு நடந்தான். ஒரு பெரிய மரத்தின் நிழலில் அவர்களை இறக்கினான். களைப்புடன் இருந்த அவர்கள் நன்கு தூங்கத் தொடங்கினார்கள். விழித்திருந்து காவல் காத்தான் அவன்.
அந்தக் காட்டில் இடும்பன் என்ற கொடிய அசுரன் இருந்தான். தனது தங்கை இடும்பியிடம் அவன், “எங்கோ மனித வாசனை அடிக்கிறது. நீ சென்று அவர்களைக் கொன்று இங்கே தூக்கி வா. நாம் உண்ணலாம்” என்றான்.
பாண்டவர்கள் இருந்த இடத்திற்கு வந்தாள் இடும்பி. வலிமை வாய்ந்த பீமனைப் பார்த்ததும் அவளுக்குக் காதல் உண்டாயிற்று. அழகிய பெண்ணாக மாறிய அவள் பீமனிடம் வந்தாள்.
“அன்பரே! உங்களைக் கண்டதும் காதல் கொண்டு விட்டேன். நான் இடும்பாசுரனின் தங்கை இடும்பி. என் அண்ணன் சிறிது நேரத்தில் இங்கு வருவான். எல்லோரையும் கொன்று தின்பான். அதற்குள் நாம் இங்கிருந்து ஓடி விடுவோம்” என்று பரபரப்புடன் சொன்னாள். “எனக்கு யாரிடமும் அச்சம் இல்லை . உன் அண்ணன் வரட்டும்” என்றான் பீமன்.
பொறுமை இழந்த இடும்பன் அங்கு வந்தான். மலையுடன் மலை மோதுவது போல அவனும் பீமனும் மோதினார்கள். இந்த ஆரவாரத்தால் குந்தியும் மற்றவர்களும் விழித்தார்கள். பீமனுக்கும் இடும்பாசுரனுக்கும் நடந்த சண்டையைப் பார்த்துத் திகைத்தார்கள்.
ஆயிரம் யானை வலிமை கொண்ட பீமன் இடும்பனை ஓங்கிக் குத்தினான். கீழே விழுந்த இடும்பன் அருகிலிருந்த மரத்தை வேரோடு பிடுங்கினான். பீமனைத் தாக்க ஓடி வந்தான். ஆனால் பீமனோ மீண்டும் அவனை அடித்து வீழ்த்தினான். தன் தலைக்கு மேலே அவனைத் தூக்கினான். அப்படியே வீசி எறிந்தான். பாறையில் மோதி மண்டை உடைந்து இறந்தான் அவன்.
பீமனுக்கும் இடும்பிக்கும் திருமணம் – நடந்தது. அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி இருந்தனர். இடும்பிக்குக் கடோத்கஜன் என்ற மகன் பிறந்தான்.
வியாச முனிவர் அங்கு வந்தார். “நீங்கள் அனைவரும் அந்தணர் வேடத்தில் ஏக சக்கர நகரம் செல்லுங்கள்” என்றார். கண் கலங்க இடும்பி அவர்களை வழி அனுப்பி வைத்தாள். ஏக சக்கர நகரத்தை அவர்கள் அடைந்தார்கள். அங்கே அந்தணப் பெண் ஒருத்தியின் வீட்டில் தங்கினார்கள்.
சில நாட்கள் கழிந்தன. தங்களுக்கு ஆதரவு தந்த – பெண்மணி அழுது புலம்புவதைக் கண்டாள் குந்தி. “ஏனம்மா அழுகிறீர்கள்?” என்று அன்புடன் கேட்டாள்.
“இந்நகர மக்கள் பகன் என்ற அசுரனால் மிகுந்த கொடுமை அடைந்தனர். எல்லோரும் சென்று அவனைச் சந்தித்தனர். ஒவ்வொரு நாளும் ஏழு வண்டி உணவு அனுப்புகிறோம். எங்களில் ஒருவனையும் அனுப்புகிறோம் என்று அவனிடம் ஒப்புக் கொண்டனர். அதன்படியே அனுப்பி வருகிறோம்.
இன்று என் மகன் செல்ல வேண்டிய முறை. மகனுக்காக அழுகிறேன்” என்றாள் அவள். “அம்மா! எங்களுக்கு ஆதரவு தந்தவர் நீங்கள். உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது எங்கள் கடமை. என் மகன்களில் ஒருவனை உங்கள் மகனுக்குப் பதில் அனுப்பி வைக்கிறேன்” என்றாள் குந்தி. வற்புறுத்தி அவளை ஒப்புக் கொள்ள வைத்தாள்.
பீமனை அழைத்த குந்தி, “உணவு வண்டிகளுடன் நீ பகாசுரனிடம் செல்” என்றாள். உணவு வண்டிகளை ஓட்டிக் கொண்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் பீமன். காட்டை அடைந்ததும் நின்றான். ஏழு வண்டி உணவையும் வயிறார உண்டு ஏப்பம் விட்டான்.
காடே அதிருமாறு அங்கு வந்தான் பகாசுரன் காலியாக இருந்த வண்டிகளைப் பார்த்தான். “என் உணவை, நீயே சாப்பிட்டு விட்டாயா? உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்” என்று கோபத்துடன் கத்தினான். அவனுக்கும் பீமனுக்கும் கடுமையான சண்டை நடந்தது. அவனை கொன்று வீழ்த்தினான் பீமன்.
பகாசுரன் கொல்லப்பட்டதை அறிந்த மக்கள் – மகிழ்ச்சி அடைந்தனர். பீமனை ஆரவாரத்துடன் வாவேற்றனர்.