Chapter 20 - Dronar in Warfield

THE MAHABHARATHAM – Ch – 20 – போர்க்களத்தில் துரோணர்

துரோணரிடம் வந்த துரியோதனன் “கௌரவர் படைக்குத் தலைமை ஏற்க வேண்டும்” என்றான்.

மகிழ்ந்த துரோணர், “துரியோதனா! என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார்.

“தருமனை உயிருடன் சிறை பிடித்துத் தாருங்கள்”

“துரியோதனா! போர்க்களத்தில் என் குறுக்கே வராமல் அர்ச்சுனனைத் தடுத்துவிடு. நான் தருமனைச் சிறை பிடித்து விடுகிறேன்” என்று வாக்குறுதி தந்தார் அவர். பாண்டவர்களுக்கு இந்த செய்தி தெரிந்தது. தருமனைப் பாதுகாக்க முடிவு செய்தார்கள். 

பதினோறாம் நாள் போர் தொடங்கியது. போர்க்களம் எங்கும் துரோணரே காட்சி அளித்தார். அவர் சென்ற இடம் எல்லாம் பாண்டவர் வீரர்களின் பிணங்கள் குவிந்தன.

 

அவரைப் போலவே கௌரவர் படைக்கு  அர்ச்சுனனும் அபிமன்யுவும் பேரழிவு ஏற்படுத்தினார்கள். தருமனின் தேரை நெருங்கினார் துரோணர். தருமன் சிறை பிடிக்கப்பட்டான் என்றே எல்லோரும் நினைத்தார்கள். அப்பொழுது அர்ச்சுனனின் தேர் மின்னல் வேகத்தில் அங்கு வந்தது.

அர்ச்சுனனுக்கும் துரோணருக்கும் கடுமையான போர் நடந்தது. அர்ச்சுனனை எதிர்க்க முடியாமல் துரோணர் திணறினார். கௌரவர் படை சிதறி ஓடியது. பாசறையில் துரோணரைச் சந்தித்த துரியோதனன் “நீங்கள் தந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? தருமனைச் சிறை பிடித்தீர்களா?” என்று கோபத்துடன் கேட்டான். 

“அர்ச்சுனன் குறுக்கிட்டதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் சொன்னதை நீ நிறைவேற்றவில்லை. நாளையாவது தருமனின் உதவிக்கு வராமல் அர்ச்சுனனைத் தடுத்துவிடு. நான் தருமனைச் சிறை பிடிக்கிறேன்” என்று அவனை அமைதிப்படுத்தினார்.

பன்னிரண்டாம் நாள் போர் தொடங்கியது. துரியோதனனின் திட்டப்படி திரிகர்த்தர்கள் அர்ச்சுனனைப் போருக்கு அழைத்தனர். அவர்களுடன் போரிடச் சென்றான் அர்ச்சுனன்.

 

தருமனைச் சிறை செய்ய நினைத்தார் துரோணர். பாண்டவர் படையை நோக்கி முன்னேறினார். தருமனுக்கு உதவியாக நின்றவர்களைத் தோற்று ஓடச் செய்தார். அவருக்கு அஞ்சிய தருமன் போர்களத்தை விட்டே ஓடி விட்டான். 

இன்னொரு பக்கத்தில் பீமன் பகதத்தனோடு போர் செய்தான். அர்ச்சுனன் திரிகர்த்தர்களைக் கொன்றான். எதிர்த்த கௌரவர் படைகளை அழித்தான். பாண்டவர் களுக்கு வெற்றியாக அன்றைய போர் இருந்தது.

துரோணரைச் சந்தித்த துரியோதனன் “. உங்களால் தருமனைச் சிறை பிடிக்க முடியவில்லை, என்று கேலி செய்தான்.

“துரியோதனா! நாளைய போரில் நான் சக்கர வியூகம் அமைக்கிறேன். அதை யாராலும் எளிதில் ஊடுருவ முடியாது. நீ அர்ச்சுனனை வேறு பக்கம் அழைத்துக் சென்றுவிடு. உன் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார். 

பதின்மூன்றாம் நாள் போர் தொடங்கியது. சமசப்தர்கள் அர்ச்சுனனைப் போருக்கு அழைத்தார்கள். அவர்களுடன் போர் செய்யச் சென்றான் அவன். சக்கர வியூக வாயிலைக் காத்து நின்றான் ஜயத்ரதன். பீமன் முதலான மாவீரர்கள் பலமுறை முயற்சி செய்தனர். அவர்களால் அந்த வியூகத்திற்குள் நுழைய முடியவில்லை.

 

அபிமன்யுவிடம் பீமன், ”உனக்கு இந்த வியூகத்திற்குள் நுழையத் தெரியும். ஆனால் வெளியே வரத் தெரியாது. நீ முதலில் வியூகத்திற்குள் நுழை. உன்னைத் தொடர்ந்து நாங்களும் வருகிறோம். வியூகத்தை உடைத்துக் கௌரவர்களுக்குத் தோல்வியை ஏற்படுத்தாலாம்” என்றான்.

அதன்படி வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அபிமன்யு. தொடர முயன்ற பீமனையும் மற்றவர்களையும் ஜயத்ரதன் தடுத்து நிறுத்தினான். என்ன முயன்றும் அவர்களால் வியூகத்திற்குள் நுழைய முடியவில்லை . அதற்குள் வியூகம் மூடப்பட்டது.

வியூகத்திற்குள் தனியே சிக்கிக் கொண்டான் அபிமன்யு. அவனைத் துரோணர், கர்ணன், அசுவத்தாமன் போன்றோர் சூழ்ந்து கொண்டனர். வீரத்துடன் போரிட்ட அவனை அவர்கள் கொன்றார்கள். சமசப்தர்களை வென்று திரும்பினான் அர்ச்சுனன். மகன் அபிமன்யுவின் சாவு அவனை நிலை குலையச் செய்தது.

“என் மகன் சாவிற்கு ஜயத்ரதனே காரணம். நாளை கதிரவன் மறையும் முன் அவனைக் கொல்வேன். இல்லையேல் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்தான்.

பதினான்காம் நாள் போர் தொடங்கியது. ஜயத்ரதன் கௌரவர் படையால் நன்கு பாதுகாக்கப்பட்டான். அர்ச்சுனனால் அவனை நெருங்கவே முடியவில்லை.

 

மாலை நேரம் வந்தது. தன் சக்கரத்தால் கதிரவனை மறைத்தார் கண்ணன். எங்கும் இருள் சூழ்ந்தது. சபதத்தில் தோற்ற அர்ச்சுனன் உயிரை விட முடிவு செய்தான். அதற்காக தீ வளர்க்கப்பட்டது.

அர்ச்சுனன் இறப்பதைக் காண ஜயத்ரதனும் பலரும் மகிழ்ச்சியோடு அங்கே வந்திருந்தார்கள். தன் சக்கரத்தை விலக்கினார் கண்ணன். கதிரவனின் ஒளி எல்லோர் மீதும் பட்டது.

“அர்ச்சுனா! இன்னும் கதிரவன் மறையவில்லை . அம்புவிடு” என்றார் கண்ணன். அர்ச்சுனனின் அம்பு குறி தவறவில்லை. ஜயத்ரதனின் தலையைத் துண்டித்து வீழ்த்தியது.