Chapter 10 மகனுக்கும் கண் இல்லை

Chapter 10 மகனுக்கும் கண் இல்லை + சூதாட்டம்

மாயாசுரன் கட்டிய – அழகிய மாளிகை துரியோதனனை ஈர்த்தது. வேடிக்கை பார்பதற்க்காக அதற்குள் சென்றான்.

“ஆ! இவ்வளவு அழகிய மாளிகையா? தேவர் உலகத்திலும் இத்தகைய மாளிகை இருக்க முடியாதே” என்று வியந்தான்.

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தான். வழியில் பொய்கை இருப்பதாக நினைத்தான். ஆடைகளை மேலே தூக்கியபடி நடந்தான். அங்கே பொய்கை இல்லாததால் ஏமாற்றம் அடைந்தான்.

மற்றோர் இடத்தில் தரை என்று நினைத்துக் காலை வைத்தான். அங்கிருந்த பொய்கையில் விழுந்தான். அவன் ஆடை நனைந்தது. அப்படியே எழுந்தான்.

மேன்மாடத்தில் நின்றிருந்த பாஞ்சாலி இவற்றைப்  பார்த்தாள். “இவர் தந்தைக்குத்தான் கண் இல்லை என்று நினைத்தேன். இவருக்கும் இல்லையோ?” என்று கலகலவென்று சிரித்தாள்.

தலையை உயர்த்தி அவளைக் கோபமாக முறைத்தான் துரியோதனன். என்னைப் பார்த்து இப்படிச் சிரித்து விட்டாளே. இவளைக் கொடுமையாகப் பழி வாங்குவேன் என்று உள்ளுக்குள் கறுவினான்.

அத்தினாபுரம் – திரும்பிய அவன் சகுனியிடம் மாமனே பாண்டவர்கள் நாளுக்கு நாள் வலிமை மிகுத்து வருகிறார்கள். இராசசூய வேள்வியும் செய்து விட்டார்கள். என்னால் இதைத் தாங்க முடியவில்லை. அவர்களை ஒழிக்க ஏதேனும் வழி சொல்” என்று உள்ளம் புழுங்கினான்.

“துரியோதனா! சிறந்த வீரர்களாகிய பாண்டவர்களை போரில் வெல்வது கடினம். சூழ்ச்சியால் தான் அவர்களை வெல்ல வேண்டும். தருமன் சூதாடுவதில் விருப்பம் உடையவன். எப்படியாவது அவனை என்னுடன் சூதாட வை. அவன் செல்வம் அனைத்தையும் உன்னிடம் சேர்க்கிறேன்” என்றான் சகுனி.

“மாமனே! நல்ல வழி சொன்னாய்” என்று பாராட்டினான் துரியோதனன். இருவரும் திருதராட்டினனிடம் வந்தார்கள். ”தந்தையே! பாண்டவர்களை இங்கே அழையுங்கள். தருமனுடன் சூதாட மாமன் தயாராக உள்ளார். பாண்டவர்கள் செல்வம் அனைத்தையும் என்னிடம் தருவார்” என்றான் துரியோதனன்.

கோபம் கொண்ட திருதராட்டினன், “சகுனி! என் மகனைக் கெடுப்பதே நீதான்” என்று கண்டித்தான். இதனால் கடுங்கோபம் கொண்டான் துரியோதனன். “தந்தையே! சூதாட்டத்துக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையேல் நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று மிரட்டினான்.

மகன் மீது கொண்ட பாசம் திருதராட்டினனின் அறிவை மறைத்தது. “உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்றான்.

விதுரரை அழைத்த அவன் “இங்கே அழகிய மண்டபம் ஒன்று கட்டப்பட உள்ளது. அதைப் பார்க்கப் பாண்டவர்களை நான் அமைத்ததாகச் சொல். சூதாட்டம் நிகழ உள்ளதாகத் தெரிவி” என்றான்.

இந்திரப் பிரஸ்தம் சென்ற விதுரர் தருமரை சந்தித்தார். செய்தியைச் சொன்னார். “சூதாட்டத்துக்கு உங்களை அழைக்கிறார்கள். ஏதோ சூழ்ச்சி நிகழ உள்ளது என்றார்.

“எது நிகழ்ந்தாலும் நிகழட்டும். பெரியவர்கள் சொல்லை மீற மாட்டேன்” என்றான் தருமன். பாண்டவர்கள் ஐவரும் குந்தியுடனும் பாஞ்சாலியுடனும் அத்தினாபுரம் வந்தனர். புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். எங்கும் விருந்தும் கேளிக்கையுமாக இருந்தது சில நாட்கள் அங்கேயே தங்கினர்.

பாண்டவர்களைப் பார்த்து துரியோதனன் “மகிழ்ச்சியாக நாம் பகடை உருட்டி சூது விளையாடலாமா?” என்று கேட்டான். “விளையாடலாம்” என்றான் தருமன். 

சூதாட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந்தன. அந்த அவையில் திருதராட்டினன், விதுரர், துரோணர் முதலானோர் இருந்தனர். இளவரசர்களும் மற்றவர்களும் குழுமி இருந்தனர்.

சூதாட்டம் தொடங்கியது. தம்பியருடன் இருந்த தருமனைப் பார்த்தான் துரியோதனன். “எனக்குப் பதில் மாமன் சகுனி விளையாடுவார்” என்றான். தருமனும் அதற்கு ஒப்புக் கொண்டான். 

பகடையை உருட்டி தருமனும் சகுனியும் விளையாடத் தொடங்கினார்கள். ஒவ்வொரு முறையும் சகுனியே வெற்றி பெற்றுக் கொண்டிருந்தான்.

ஆட்டத்தில் தன்னை மறந்தான் தருமன். செல்வங்களை எல்லாம் இழந்த அவன் நாட்டையும் இழந்தான். தம்பியரையும் ஒவ்வொருவராக வைத்து இழந்தான். தன்னையும் பணயப் பொருளாக வைத்து இழந்தான். 

“அண்ணா இழந்தது போதும். நிறுத்துங்கள்.” என்று பலமுறை குறுக்கிட்டான் பீமன். ஆனால் தருமனோ அதைப் பொருட்படுத்தவில்லை. சூதாடுவதிலேயே ஆர்வமாக இருந்தான்.

“தருமா! எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக எண்ண வேண்டாம். உன் மனைவி பாஞ்சாலி இருக்கிறாள். அவளை வைத்துச் சூதாடு. இழந்ததைப் பெற வாய்ப்புண்டு” என்று வஞ்சகமாகப் பேசினான் சகுனி. 

பாஞ்சாலியையும் பணயப் பொருளாக வைத்துத் தோற்றான் தருமன். மகிழ்ச்சி தாங்காமல் துள்ளிக் குதித்தான் துரியோதனன். “பாஞ்சாலி நம் அடிமை. அவளை இங்கே இழுத்து வாருங்கள். நம் அரண்மனையைப் பெருக்கித் தூய்மை செய்யட்டும்” என்று உரத்த குரலில் கத்தினான். 

இதைக் கேட்டு அவையில் இருந்த அனைவரும் கலங்கினார்கள். சிலர் அழத் தொடங்கினார்கள். அங்கிருந்த விதுரர் கோபத்துடன் எழுந்தார். “துரியோதனா! உனக்கு என்ன பைத்தியமா? பிறரை அவமதிப்பதை முதலில் நிறுத்து. தீய செயல்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதே” என்று எச்சரித்தார்.