Chapter 5 இளவரசர்களின் அரங்கேற்றம்

Chapter 5 இளவரசர்களின் அரங்கேற்றம்

     அரசவைக்குச் சென்ற அவர் திருதராட்டினனிடம், “அரசே! இளவரசர்கள் அனைவரும் போர்க் கலையில் வல்லவர்களாக வளங்குகின்றனர்” என்றார். இதை கேட்டு

மகிழ்ந்த திருதராட்டினன், “விதுரரே! இளவரசர்களின் அரங்கேற்றத்திற்கு நல்ல நாள் குறியுங்கள். அவர்கள் திறமையை மக்கள் அனைவரும் கண்டு களிக்கட்டும்” என்றான். 

இளவரசர்களின் அரங்கேற்றத்திற்காகப் பெரிய விளையாட்டு அரங்கம் அழகுபடுத்தப்பட்டது. நகரமே விழாக் கோலம் பூண்டது. அரங்கத்தின் ஒரு பகுதியில் திருதராட்டினனும் குந்தி தேவியும் அவையினரும் இருந்தார்கள். 

இன்னொரு பகுதியில் மக்கள் திரளாகக் கூடி இருந்தனர். இளவரசர்கள் ஒவ்வொருவராக அரங்கத்திற்கு வந்தார்கள். தாங்கள் கற்ற போர்க்கலையைச் செய்து காட்டினார்கள். கையில் கதையுடன் பீமனும் துரியோதனனும் அரங்கத்திற்குள் வந்தார்கள். 

மக்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. முதலில் அவர்கள் இருவரும் விளையாட்டாகப் போர் செய்யத் தொடங்கினார்கள். பிறகு உண்மையாகவே தாக்கிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

வெறியுடன் அவர்கள் போரிடுவதைக் கண்டு எல்லோரும் திகைத்தார்கள். மிகவும் முயன்று அவர்கள் இருவரையும் அசுவத்தாமன் பிரித்தான். இருவரும் உறுமிக் கொண்டே கோபத்துடன் பிரிந்தார்கள்.

அடுத்ததாக அர்ச்சுனன் அரங்கத்திற்கு வந்தான். வில்லில் அம்புகளைப் பூட்டிப் பல அற்புதங்களைச் செய்தான்.

ஓர் அம்பு தீயை உமிழ்ந்தது. இன்னொரு அம்பு தண்ணீரைக் கொட்டியது. வில்லிலிருந்து ஒரே சமயத்தில் எண்ணற்ற அம்புகள் சீறிப் பாய்ந்தன. “அர்ச்சுனனின் வில்லாற்றல் வாழ்க” என்ற வாழ்த்தொலி எங்கும் கேட்டது.

அப்பொழுது அழகிய இளைஞன் ஒருவன் பெருமிதத்துடன் அரங்கத்திற்குள் நுழைந்தான். அவன் மார்பில் கவசமும் காதுகளில் குண்டலங்களும் பளபளத்தன.

“அர்ச்சுனா! என்ன வில் வித்தை கற்று வைத்துள்ளாய்? என் ஆற்றலைப் பார்” என்று வீர முழக்கம் செய்தான். தன்னால் ஆற்றில் விடப்பட்ட மகனே அவன் என்பது குந்திக்குப் புரிந்தது. வில்லில் அம்பு பூட்டினான் அவன். அர்ச்சுனனுக்கும் மேலாகப் பல அற்புதங்கள் செய்து காட்டினான்.

புதிதாக வந்தவன் பேரும் புகழும் பெறுவதைக் கண்டான் அர்ச்சுனன். அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. “என்னுடன் போருக்கு வா. உன்னை இங்கேயே கொன்று ஒழிக்கிறேன்” என்று கத்தினான்.

இருவருமே போர் செய்யத் தயார் ஆனார்கள். இதைக் கண்ட குந்தி மயங்கி விழுந்தாள். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அவளை அரண்மனைக்குத் தூக்கிச் சென்றார்கள்.

அந்த இளைஞனைப் பார்த்து கிருபாச்சாரியார், “அர்ச்சுனனோடு போர் செய்யத் துடிக்கிறாயே, நீ எந்த நாட்டு இளவரசன்? எந்த அரச பரம்பரையில் வந்தவன்? சொல்” என்று கேட்டார்.

இதைக் கேட்ட அவன் தலை கவிழ்ந்தான். அவன் கையிலிருந்த வில் நழுவியது. இதைப் பார்த்த துரியோதனன் கோபத்துடன் எழுந்தான். “பிறப்பால் உயர்வு தாழ்வு

பாராட்டுவது உயர்ந்தோர் செயலா? அகத்தியர் மண் கலத்தில் பிறந்தவர். சுக முனிவர் கிளிக்குப் பிறந்தவர். பிறப்பால் அவர்களை யாரும் குறை சொல்வது இல்லை. இந்த இளைஞனை இன்றே அங்க நாட்டு அரசன் ஆக்குகிறேன்” என்றான்.

அந்த இளைஞன் அரசனாக முடிசூட்டப்பட்டான். தனக்குக் கிடைத்த – பெருமையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தான் அவன். துரியோதனனை நன்றியுடன் பார்த்த அவன், “அரசே! என் பெயர் கர்ணன். தேரோட்டி அகிரதனின் மகன். குலப் பழியை நீக்கி என்னைப் பெருமைப்படுத்தினீர்கள். உங்களுக்காக என் உயிரையும் தருவேன். இது உறுதி” என்றான்.

“கர்ணா! நாம் இருவரும் நண்பர்கள்” என்று அவனைத் தழுவிக் கொண்டான் துரியோதனன். அரங்கேற்றம் முடிவிற்கு வந்தது. புதிதாக வந்த இளைஞன் எல்லோரையும் கவர்ந்து விட்டானே. தாங்கள் பெருமை பெற முடியவில்லையே என்று பாண்டவர்கள் வருந்தினார்கள்.

வலிமை வாய்ந்த நண்பன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்தான் துரியோதனன். சில நாட்கள் சென்றன. பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரைப் பணிவாக வணங்கினார்கள்.

“குருவே! எங்கள் கல்விப் பயிற்சி முடிந்தது. தங்களுக்குக் குருதட்சணை தர வேண்டும். எதுவாயினும் தயங்காமல் கேளுங்கள்” என்று பணிவுடன் வேண்டினார்கள்.

“மாணவர்களே! சிறுவனாக நான் இருந்தேன். என் தந்தை பரத்வாச முனிவரிடம் கல்வி கற்று வந்தேன். பாஞ்சால நாட்டு இளவரசன் துருபதனும் என்னுடன் கல்வி

கற்றான். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

துருபதன் என்னிடம் ‘என் உயிர் நண்பன் – உனக்காக எதையும் செய்வேன். என் நாட்டில் பாதி உன்னுடையது’ என்றான்.

கல்வியை முடித்த துருபதன் தாய்நாடு சென்றான். அரசன் ஆனான்.

எனக்குத் திருமணம் நடந்தது. அசுவத்தாமன் என்ற மகன் பிறந்தான். வறுமையில் வாடிய நான் உதவி வேண்டி துருபதனிடம் சென்றேன். அரசன் என்ற ஆணவத்தில் அவன் என்னை இழிவாகப் பார்த்தான். “அரசனும் ஆண்டியும் எங்காவது நண்பர்கள் ஆவார்களா? போ! போ!” என்று என்னை விரட்டினான்.

இப்படிப்பட்ட அவமானம் நேர்ந்ததே என்று கோபம் கொண்டேன். “துருபதா! என்னை இழிவுபடுத்திய உன்னைப் பழி வாங்குவேன். தேர்க்காலில் கட்டி உன்னை இழுத்து வரச் செய்வேன். என் காலில் விழுந்து பணிய வைப்பேன் என்று சபதம் செய்தேன். அகம் என் சபதத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இதுவே நான் வேண்டும் குருதட்சணை” என்றார் துரோணர். கௌரவர்களும் பாண்டவர்களும் பெரிய படைகளுடன் தனித்தனியே புறப்பட்டனர்.

பாஞ்சால வீரர்களிடம் தோற்ற கௌரவர் படை ஏமாற்றத்துடன் திரும்பியது. அடுத்ததாகப் பாண்டவர் படை பாஞ்சால வீரர்களைச் சந்தித்தது. அர்ச்சுனனை எதிர்க்க முடியாத பாஞ்சாலப் படை தோற்று ஓடியது. துருபதனைச் சிறை பிடித்தான் அர்ச்சுனன். தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து துரோணரின் முன் நிறுத்தினான்.

தலை கவிழந்து நின்ற துருபதனைப் பார்த்தார் துரோணர். “நண்பனுக்குப் பாதி நாட்டைத் தருவதாகச் சொன்னாய். உதவி கேட்ட போது மறுத்தாய். பாதி நாட்டிற்குப் பதில் முழுநாட்டையே உனக்குத் தருகிறேன். பிழைத்துப் போ’ என்றார்.

நாடு திரும்பினான் துருபதன். தன்னை அவமானப்படுத்திய துரோணரைக் கொல்ல வேண்டும். வீரம் மிகுந்த அர்ச்சுனனைத் தன் மருமகனாகப் பெற வேண்டும் என்பதே அவன் குறிக்கோளாக இருந்தது. அதற்காகப் பெரிய வேள்வி ஒன்று செய்தான்.

அந்த வேள்வியிலிருந்து திஷ்டத்தும்மன் – என்ற மகன் தோன்றினான். அடுத்ததாகப் பாஞ்சாலி என்ற பெண் தோன்றினாள். 

அங்கே அத்தினாபுர அரியணையில் திருதராட்டினன் வீற்றிருந்தான். விதுரர் எழுந்து, “அரசே! இளவரசர்களில் மூத்தவனாக தருமன் – உள்ளான். நற்பண்புகளால் எல்லோரையும் கவர்ந்து உள்ளான். அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுங்கள்” என்றார்.

அவையிலிருந்த பீஷ்மரும் துரோணரும் மற்றவர்களும் இதை ஆதரித்தார்கள். இதைக் கேட்டு துரியோதனன் கடுங்கோபம் கொண்டான். “நான் இருக்கும் போது தருமனுக்கு இளவரசுப் பட்டமா? இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று வெளியேறினான்.

சகுனியுடனும் கர்ணனுடனும் தம்பி துச்சாதனன் உடனும் இது குறித்து ஆராய்ந்தான். தருமனை அரியணையில் அமர விடக்கூடாது. அதற்காக எதையும் செய்வது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.சதித்திட்டம் ஒன்று உருவாயிற்று. தந்தையிடம் வந்த துரியோதனன், “தருமன் அரசனானால் பாண்டவர்கள்

வலிமை பெற்று விடுவார்கள். நாம் அவர்களிடம் பிச்சை கேட்கும் நிலை வரும். அதைப் பார்த்து நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்றான்.

பாசத்தால் நெகிழந்த – திருதராட்டினன், “மகனே! தருமனுக்கு முடிசூட எல்லோரும் விரும்புகிறார்கள். அவன் தன் நற்பண்புகளால் எல்லோரையும் கவர்ந்து உள்ளான் என்னால் என்ன செய்ய இயலும்?” என்று கேட்டான்.

”தந்தையே! வெகு தொலைவில் உள்ள வாரணாவதத்தில் பெரிய திருவிழா நிகழ உள்ளது. பாண்டவர்களை அங்கே அனுப்பி வையுங்கள். அவர்கள் திரும்பி வர நீண்ட காலம் ஆகும். அதற்குள் நான் மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறேன் ” என்றான்.

“மகனே! உன் எண்ணம் போல நடக்கிறேன்” என்றான் திருதராட்டினன். மகிழ்ச்சியுடன் தன் மாளிகை வந்தான் துரியோதனன். தன் நண்பனும் சிற்பியுமான புலோச்சனனை அழைத்தான். “நீ வாரணாவதம் செல். அங்கே உன் திறமைகளை எல்லாம் காட்டி அழகிய அரக்கு மாளிகை கட்டு. பாண்டவர்களை அந்த மாளிகையில் தங்க வை. 

அவர்கள் தூங்கும் போது அரக்கு மாளிகையைக் கொளுத்தி விடு. எல்லோரும் எரிந்து சாம்பலாக வேண்டும். யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது” என்றான்.

பாண்டவர்களை அழைத்த திருதராட்டினன், “வாரணர்வதத்தில் பெரிய திருவிழா நிகழ உள்ளது. அங்கே நிகழும் சிவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம் சார்பாக நீங்கள் அங்கே சென்று வாருங்கள்” என்றான்.

“தந்தையே! உங்கள் விருப்பப்படியே நாங்கள் நடப்போம்” என்றான் தருமன்.

(தொடரும்…)